சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன் உயிரிழப்பு

சிறையில் விசாரணை கைதி  செல்வமுருகன் உயிரிழப்பு

விருத்தாச்சலம் கிளைச் சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன், வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றியே, உயிரிழந்ததாக காவல்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், நகை திருட்டு வழக்கில் அக்டோபர் 28ஆம் தேதி நெய்வேலி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர், நவம்பர் 2ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4ஆம் தேதி மரணமடைந்துள்ளார்.

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால் தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாக
செல்வமுருகனின் மனைவி பிரேமா குற்றம் சாட்டினார். இதையடுத்து, நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலக குற்றப்பிரிவில் உள்ள சுதாகர், அறிவழகன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும், தனது கணவர் செல்வமுருகன் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு மறுபிரேதப்பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், வலிப்பு நோய் காரணமாக கடந்த 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது காவல்நிலைய மரணமில்லை எனவும் அரசியல் காரணங்களுக்காக கதைகளை புனைந்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய மனித உரிமை ஆணைய விதிப்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, வீடியோ பதிவு செய்துள்ளதால், மறு பிரேத பரிசோதனை செய்ய அவசியம் இல்லை என தெரிவித்த அவர், செல்வமுருகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவரது உடலில் வெளி காயங்கள் ஏதும் இல்லை என சான்றிதழ் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே உரிய விசாரணைக்காக சி.பி.சி. ஐ. டி க்கு மாற்றப் பட்டுள்ளதாகவும், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரினார்.மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *