நிவர் புயல் பற்றி வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் தகவல்…

நிவர் புயல் பற்றி வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் தகவல்…
நிவர் புயலால் வடதமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்தப் புயல் நாளை புதுவை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.
Cyclone

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, நிவர் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது.

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை தீவிரப் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.

டெல்டாவில் அதிகனமழை

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும். அடுத்துவரும் 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோரப் பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்.

Nivar Cyclone

வட தமிழகம்

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை புதுவை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சூறைக்காற்று

நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், காற்று மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், காற்று மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வரை நாளை முற்பகல் முதல் இரவு வரையும் வீசக்கூடும்.

Seacoast

கடல் கொந்தளிப்பு

நாளை இரவு வரை தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் இயல்பை விட 2 மீட்டர் உயரத்துக்கு எழும்பக்கூடும். ஆகவே, மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்லவேண்டாம்.

நேற்றிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்வு 25 கி.மீ. வேகமாக இருந்தது. அதன் பின்னர் மாலைவரை மணிக்கு 11 கி.மீ. வேகத்திலும், அதன் பின்னர் 14 கி.மீ. வேகத்திலும், இரவு 4 கி.மீ. வேகத்திலும் நகர்ந்திருந்தது. தற்போது புயலின் நகர்வு நிலையாக உள்ளது. ஒவ்வொரு புயலும் வலுப்பெறும்போது அது நிலப்பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது அதன் நகர்வு குறைவாக இருக்கும்.

கரையை கடக்கும்

அது தீவிரப் புயலாக மாறும்போது வேகம்பெற்று நகரும். புயலின் நகரும் வேகத்துக்கும் திசை மாறுவதற்கும் சம்பந்தமில்லை. எந்தப் புயலும் ஒரே சீரான வேகத்துடன் நகராது. தற்போதைய கணிப்பைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு அருகே நாளை மாலை புயல் கரையைக் கடக்கும் என்று அவர் கூறினார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *