பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானின் கிளர்ச்சி படையின் கைவசம் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் முழுவதுமாக கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. நாட்டின் பெரும்பகுதி, தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் வடக்கே இந்துகுஷ் மலைத் தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தேசிய கிளர்ச்சி படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. முன்னாள் ஆப்கன் கொரில்லா படைப் பிரிவு தலைவர் அஹமது ஷா மசூதியின் மகன் அஹமது மசூத், இந்தப் படையின் தலைவராக உள்ளார். தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கன் வருவதற்கு முன் இருந்த அஷ்ரப் கனி அரசில் துணை ஜனாதிபதியாக இருந்த அமருல்லா சலேஹுவும் இந்தப் படைகளுக்கு ஆதரவாக உள்ளார்.

தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்ததால் அவர் பஞ்ச்ஷிர் பகுதியில் அடைக்கலம் புகுந்துள்ளார். நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்ற தலிபான்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் சண்டை நடந்து வந்தது. அதில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சி படையினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தலிபான்கள் வசமானது. பஞ்ச்ஷீர் தலைநகரில் தலிபான் அமைப்பின் கொடியும் ஏற்பட்டு இருக்கிறது.

Exit mobile version