வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக கடலூருக்கு சென்றுக் கொண்டிருந்த நடிகை குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது. இதில் நடிகை குஷ்பு லேசான காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுக்குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக, நடிகை குஷ்பு தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் பின்பக்க கதவு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. ஆனால், குஷ்பு லேசான காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், விபத்துக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுக்குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” மேல்மருவத்தூர் அருகே நான் சென்ற கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. உங்கள் ஆசீர்வாதங்களாலும், கடவுளின் ஆசியாலும் நான் நலமாக இருக்கிறேன். கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணம் தொடரும். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனது கணவர் முருக கடவுளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்துவிட்டோம் ” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்ததால், வேல் யாத்திரையில் பங்கு பெறுவதற்காக மாற்று கார் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், அந்தக் காரில் குஷ்பு கடலூர் நோக்கி புறப்பட்டுச் சென்றார். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.




