கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வர முடியவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை :
நடிகர் ரஜினி காந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு வரும் டிசம்பர் 31 ம் தேதி வெளியிடப்படும்’ என்று ஏற்கனவே அவர் அறிவித்து இருந்தார். இன்னும் சட்டசபை தேர்தல் 4 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதால் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடிக்குமாறு நடிகர் ரஜினி காந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 14 ம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, நடிகர் ரஜினி காந்த் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த சோதனையில் நடிகர் ரஜினி காந்திற்கு ‘நெகட்டிவ்’ என வந்தபோதிலும் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.இந்தநிலையில், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு கடந்த 25 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு தனிவிமானம் மூலம் வீடு திரும்பினார்.தற்போது தான் கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்;
என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை என்றும் தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று என்றால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் உடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்குவர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை ஆதரித்த அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், ரஜினி மக்கள் மன்ற இயக்கம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.




