சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 9 மீனவர்கள், 75 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், ஆகஸ்ட் 7-ம் தேதி திட்டமிட்டபடி அவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இதை அடுத்து மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை படை தேடுதல் வேட்டையை தொடங்கின.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து நாடுகளையும் தொடர்பு கொண்டு மீனவர்களை தேடுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து, செப்டம்பர் 15-ம் தேதி அதிகாலையில் காணாமல் போன 9 மீனவர்களையும் மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் மீட்டனர்.

மோசமான வானிலை காரணமாக மீட்கப்பட்ட மீனவர்கள் கடல் மார்க்கமாக தாயகம் திரும்ப வரவிருந்த திட்டம் ரத்தானது. இந்த நிலையில், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீனவர்கள் மியான்மரில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை அமைச்சர் ஜெயக்குமார், சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், மீனவர்களுக்கு புதிய உடைகள் கொடுத்து, வழிச்செலவிற்கு என்று தன் சொந்த பணத்தை கொடுத்து, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து அவர்களை, அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் G.S.சமீரன், IAS., மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.




