அரசியல் களம் கண்ட தமிழ் திரையுலகினரின் வெற்றியும் தோல்வியும் சொல்வது என்ன ?

திரையுலகிற்கும் அரசியலுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நடிகர் தொடர்ந்து ஒரு நான்கு படத்தில் அரசியலை பற்றி பேசினால் அவரை ரசிகர்கள் அரசியலுக்கு வர சொல்வது எப்பொழுதும் நடக்கும் ஒன்று.

திரையுலகை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது காலம் காலமாக நடந்து வரும் ஒன்று. ஆனால் வருபவர்கள் அத்தனை பேருமே வெற்றி பெறுகிறார்களா எனக் கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே! ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வந்து அரியணையில் அமர்ந்தவர்களும் உண்டு, இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்களும் உண்டு.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

தமிழக அரசியலின் மிகப்பெரிய மகுடம் என்றால் அது MGR தான். அவருக்காகவே இன்றும் ஓட்டு போட்டுக் கொண்டிருக்கும் மக்களும் இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவினால் அரசியலில் ஈர்க்கப்பட்ட MGR முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். திரைப்படங்களின் மூலம் அரசியல் வசனங்களை பேசி மக்களிடையே கட்சியை பரப்பினார். அதன் பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார், சிறுசேமிப்பு தலைவரானார், அதன் பிறகு திமுக கட்சியின் பொருளாளர் ஆனார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சியை நிறுவினார். அதன் பிறகு தமிழக அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தார். இந்த நாட்டிலேயே இல்லாமல் பதிவு செய்யப்பட்ட தன் குரலை வைத்தே ஆட்சியை பிடித்தார்.

பட்டுகோட்டையாரால் அரசியலில் ஈர்க்கப்பட்ட கருணாநிதி தன்னுடைய பதிமூன்றாம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். திக விடம் பிரிந்து திமுக என்னும் கட்சியை அண்ணா உருவாக்க கருணாநிதி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். 1957 ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டசபை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஆனார். ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர். 1957 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை தான் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

இலவச மின்சாரம், கலைஞர் காப்பிட்டு திட்டம், இலவச அரிசி, இடஒதுக்கீடு, போலீஸ் கமிஷன் இலவசப் பஸ் பாஸ், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சமத்துவபுரம்,நமக்கு நாமே திட்டம், மாநில சுயாட்சித் தீர்மானம்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் தனித்துறை, இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷா, இலவச டிவி,உழவர் சந்தைகள், மறுவாழ்வு இல்லங்கள், எனப் பொன்னான பல திட்டங்களை கொண்டு வந்தார்.

அரசியலில் ஈடுபாடுடன் வந்தவர்கள் பலர் எனில் ஜெயலலிதா காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்தும் அதில் வெற்றிக்கொடி நாட்டியவர். ஜெ ஜெயலலிதா எனும் நான் என்னும் கம்பீரக் குரலை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது. மிகவும் இளம்வயதிலேயே முதலமைச்சர் ஆனார். ஒரு பெண்ணாக இவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது தான் அத்தனையும் தாண்டி இரும்பு மனுஷியாக வாழ்ந்தார். கட்சியை ராணுவம் போல் நடத்தினார்.2011 மற்றும் 2016 ஆண்டு அடுத்தடுத்து முதலமைச்சராகி வெற்றிவாகை சூடினார். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெற்றார்.

சினிமாவிலும் ரசிகர்களின் செல்வாக்கிலும் எம் ஜி ஆருக்கு இணையாக கருதப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்ப நாட்களில் காங்கிரசில் இணைந்து பணியாற்றிய இவர் தமிழக முன்னேற்ற முன்னணி என்னும் கட்சியை தொடங்கினார். அடுத்த தேர்தலிலேயே போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் இவரது கட்சி தோல்வியுற்றது.

இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்தித்திரன் முதலில் திமுக வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பிறகு அதிமுகவில் இணைந்து ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னாளில் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி கொண்டார்.

விஜயகாந்த்:

திரைப்படங்களில் அரசியல் வசனம் பேசிக்கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேரடி அரசியல் களம் கண்டார் முதலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களை பிடித்த இவரது கட்சி நாளடைவில் விஸ்வரூபமாகவே வளர்ச்சியடைய தொடங்கியது ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஐம்பது ஆண்டு காலம் அரசியலில் ஆண்ட திமுகவை பின்தள்ளி முன்னேறியது விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார் நேருக்கு நேர் சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சிங்கம் போல் கர்ஜித்தார் மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகம் ஈர்த்த அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சி.

சற்றும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அரசியலுக்கு வந்தவர் தான் நம் உலக நாயகன் கமலஹாசன். முதல் முறை போட்டியிட்ட தேர்தலிலேயே இவரது கட்சி ஒரு சில இடங்களை கைப்பற்றியது. ஒரு அரசியல்வாதியாக தன்னுடைய கருத்துக்களை தார்மீகமாக எடுத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

நவரச நாயகன் கார்த்திக், விஜய டி ராஜேந்தர், ராமராஜன், சரத்குமார்:

கார்த்திக், ராமராஜன், சரத்குமார், டிஆர் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் இதற்க்கு முன்பிருந்தவர்கள் போல் ஜொலிக்கவில்லை.

உண்மையில் சொல்லப்போனால் ரசிகர்களையும் மக்களையும் நம்பி அரசியலுக்கு வந்து ஜெயித்தவர்கள் எம்ஜிஆர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தான். அதன் பிறகு வந்தவர்களுக்கு இவர்களை போன்ற செல்வாக்கு கிட்டவில்லை கைதட்டுகளையும் வீண்புகழாரங்களையும் அரசியலுக்கு வந்து தன் பேரை காப்பாற்றிக் கொள்ள போராடுபவர்கள் இங்கு அதிகம். மக்கள் எப்போது என்ன முடிவெடுப்பார்கள் என தெரியாது. இது ஒரு முள்ளின் மேல் நடக்கும் வாழ்க்கை தான். பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், அரசியலுக்கு வருவது பெரிதல்ல சினிமாவில் வாங்கிய பெயரை அரசியலில் இறங்கி இழந்து விட கூடாது. நடிகர்கள் சமூக கருத்துக்களை பேசினாலே அவர்கள் மீது அரசியல் சாயம் பூசுகின்றோம். இதனாலேயே பலர் தங்கள் கருத்துக்களை கூற தயங்குகின்றனர். இவர் வந்தால் மாறிவிடும் அவர் வந்தால் மாறிவிடும் என நினைப்பதை விட மாற்றத்தை முதலில் நம்மிடம் இருந்து கொண்டு வருவோம். ஜாதி, மதம், ஊர்க்காரன், உறவுக்காரன் என பார்க்காமல் தகுதியானவருக்கு ஓட்டு போடுவது தான் நம் கடமை.

Exit mobile version