பாகிஸ்தான் தோல்வி எதிரொலி… அரையிறுதியில் கால் பதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி?

பாகிஸ்தானிடம் உலகக் கோப்பை டி 20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது, இந்திய அணியின் செமி பைனல் வாய்ப்பை கேள்வி குறியாக்கியுள்ளது.


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியா தனது முதல் குழு ஆட்டத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. 20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. எவ்வளவு அதிகமான ஸ்கோரையும் எட்டிப் பிடிக்கும் திறன் கொண்ட அணி என்ற பெயருடன் களமிறங்கிய இந்திய அணிக்கு டாஸே சோதனையாக அமைந்தது. டாஸ் வென்றால் பந்து வீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என்று விராட் கோலி நினைத்திருந்தார். ஆனால் டாஸில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸில் தோற்ற தனது ஏமாற்றத்தை அப்போதே விராட் கோலி தெரிவித்தார்.

“இந்தியா முதலில் பந்துவீச வேண்டும் என்று எதிர்பார்த்தோம்” என்று அவர் கூறினார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் கே.எல். ராகுல் 3 ரன்களிலும் வெளியேறினர். அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி தடுமாறியது. இந்திய அணி பவர் பிளேவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்தது. அதன் பிறகு நிதானமாக ரன்களைக் குவித்த விராட் கோலி, ரிஷப் பந்த் ஜோடி அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்வதற்குக் காரணமாக அமைந்தது. இருந்தாலும் அது பாகிஸ்தானை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் தடுமாறினார்கள். சொற்ப ரன்களிலேயே வெளியேறினார்கள். 19-வது ஓவரில் மீண்டும் அட்டாக்கிற்கு வந்த ஷஹீன் அப்ரிடி விராட் கோலி விக்கெட்டை தூக்கினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.


152 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்து பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட விதிக்கப்பட்ட தடை. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பல வருடங்களாக இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளவில்லை. இது தவிர, பல தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்ட கடுமையான போட்டி தொடர்பான எதிர்பார்ப்புகள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுமையாக மாறி விட்டது.

அழுத்தம் காரணமாக எழுந்த பதற்றம், போதிய அளவுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளாத அனுபவம் இன்மை, மற்றும் பாகிஸ்தான் அணியை கத்து குட்டி அணி என்று குறைத்து மதிப்பிட்டது, ஆகிய மூன்றும் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணங்களாக மாறின. என்னதான் ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாவிட்டாலும் ஐசிஐசிஐ தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடிய விராட்கோலி தான் கிங் கோலி என்பதை போட்டியில் நிரூபித்துக் காட்டினார். அதே நேரம் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால் பதட்டத்தின் காரணமாக கோட்டை விட்டு நடையை கட்டினர். பொதுவாக ஃபீல்டிங்கில் சொதப்பும் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக ஃபீல்டிங்கிலும் அசத்தியது. எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை வீசவைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அதை மிகச்சரியாக செயல்படுத்தியதால் தான் அபார வெற்றியை பெற்றது.

பவுலிங், ஃபீல்டிங்கில் அசத்திய பின்னர், 2வது இன்னிங்ஸில் பாபர் அசாமும் ரிஸ்வானும் இணைந்து பேட்டிங்கில் பட்டையை கிளப்பினர். தொடக்க வீரர்களான இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழப்பதற்கான வாய்ப்புகளைக்கூட கொடுக்காமல் இன்னிங்ஸை முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்துமே அருமையாக இருந்ததுடன், பாபர் அசாமின் கேப்டன்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. களவியூகங்கள், ஃபீல்டிங் செட்டப், பவுலிங் சுழற்சி என அனைத்துமே அருமையாக இருந்தது.அதே போல், பாகிஸ்தான் அணிக்கு பழக்கப்பட்ட ஸ்டேடியம் என்பதால், விளையாட சுலபமாக இருந்தது. ஸ்டேடியத்தை சுற்றி பந்துகளை பறக்கவிட்டதே அதற்கு உதாரணம். இனி நாம் மோதப்போகும் போட்டிகள் வாழ்வா சாவா என்ற அளவுக்கு போட்டிகளாக மாறப்போகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானிடம் இந்தியா வீழ்ந்து உள்ளதால் உலகக் கோப்பை டி 20 செமி பைனலுக்கு இந்தியா தேர்வாக முடியாமல் போய்விடுமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் இந்தியா இன்னும் செமி பைனல் வாய்ப்பை இழக்கவில்லை.

இந்தியா 3 முக்கியமான போட்டிகளில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டும் என்றால் ஒரு குழுவில் இருக்கும் அணி குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் குழுவில் ஆடும். இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளிடம் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை குழு ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்தால், இந்தியாவும் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதாவது நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்து, அதன்பின் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தி மற்ற அணிகளையும் நியூசிலாந்து வீழ்த்தினால் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடம் பிடிக்கும்.

பாகிஸ்தான் மற்ற கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி இரண்டாம் இடம் பிடிக்கும். இதனால் இந்தியா செமி பைனல் செல்லாது. ஒருவேளை குழு ஆட்டத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தினால், பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் மற்ற கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி முதல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட பட்சத்திலும் இந்தியா கண்டிப்பாக நியூசிலாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் முதல் இரண்டு வாய்ப்புகளிலும் இந்தியா கண்டிப்பாக நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும்.

வாய்ப்பு மூன்றுபடி ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளிடம் பாகிஸ்தானோ, நியூசிலாந்தோ ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து. இந்தியா ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளிடம் வெல்லும் பட்சத்தில் இந்தியா எளிதாக செமி பைனல் செல்லும். இதனால் இந்திய அணி இனி வரும் போட்டிகளில் கவனமாக ஆட வேண்டும்.

Exit mobile version