கடைசி ஓவர் த்ரில் வெற்றி! டெல்லியை வீழ்த்திய பெங்களூர்!!

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2021 லீக் போட்டியின் கடைசி நாளான நேற்று 56 ஆவது போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதின. டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் பெங்களூர் அணி 3-வது இடத்திலும் இருந்தது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருந்தது. இதனை மனதில் வைத்து இன்றைய போட்டியில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ப்ரித்வீ ஷா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 48 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். மறுபுறம் ஷிகர் தவான், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 43 ரன்களில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதற்கு அடுத்து வந்தவர்களில் ஹெட்மேயர் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் விராட் கோலி 4 ரன்னிலும் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய ஸ்ரீகர் பரத் பொறுப்புடன் ஆடினார். டி வில்லியர்ஸ் 26 ரன்னில் அவுட்டானார்.அடுத்து இறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ஸ்ரீகர் பரத்துடன் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். இறுதியில், பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஸ்ரீகர் பரத் 78 ரன்னும், மேக்ஸ்வெல் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, பெங்களூர் அணி எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 11ம் தேதி எதிர்கொள்ளவிருக்கின்றன.

Exit mobile version