ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி..!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா தொடக்க வீரர்களான சுப்மன் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் அடித்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை கொல்கத்தா அணி எடுத்து. 172 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டோன் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில் லியாம் லிவிங்ஸ்டோன் 6 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சிவம் துபே 18 ரன் எடுத்து அவுட் ஆக பின் ராஜஸ்தான் அணியில் களம் கண்ட அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கு ரன்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் மத்தியில் இறங்கிய ராகுல் திவாட்டியா மட்டும் நிதானமான ஆட்டத்தால் 44 ரன் எடுக்க இறுதியாக ராஜஸ்தான் அணி 16.1 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகர தோல்வியை தழுவியது.

கொல்கத்தா அணியில் சிவம் மாவி 4, லோக்கி பெர்குசன்3 , வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து கொல்கத்தாவின் இந்த வெற்றியால் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது.

Exit mobile version