ஓய்வு முடிவினை அறிவித்த டிவில்லியர்ஸ்!!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வுப்பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது குறித்து, தன்னுடைய ட்விட்டர் பதிவில் “என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. நான் ஒவ்வொரு போட்டியையைும் அனுபவித்து விளையாடினேன். இப்போது வயது 37 ஆகிறது. இப்போது எந்தச் சுடரும் முன்புபோல் பிரகாசமாக எரிவதில்லை. இந்த நிதர்சனத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் இன்று என்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறேன். இந்த நெடுந்தூர பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள்”. எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த கிரிக்கெட் பயணத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் எனக்கு கிடைத்த அன்பும், ஆதரவும் அபாரமானது. கிரிக்கெட் என்னுடன் எப்போதும் அன்புடன் இருந்திருக்கிறது. அது நான் தென்னாப்பிரிக்காவுக்காகவும், ஆர்சிபிக்காகவும் விளையாடும்போதும் அது குறையவே இல்லை. அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என் கிரிக்கெட் வாழ்க்கைக்காக என்னுடைய குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். இனி என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்தில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களம் இறங்கிய அவர் 360 டிகிரியிலும் சுழன்று அதிரடியாக ஆடி வெளுத்து வாங்குபவர் டிவில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version