கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதலிடம் தமிழகம் தான்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளது தமிழகம்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. மே மாதம் 6-ம் தேதி வரை தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 61,441 தடுப்பூசிகள் செலுத்தி வந்த நிலையில் முதல்வரின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து நாளொன்றுக்கு 1 லட்சத்து 96 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் 3 கோடியே 6 லட்சத்து 99 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டு, 3 கோடியே 1 லட்சத்து 75 ஆயிரத்து 410 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் 14 லட்சத்து 74 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசிடமிருந்து ஜூலை மாதம் கூடுதலாக 17 லட்சம் தடுப்பூசிகளும், ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 22 லட்சம் தடுப்பூசிகளும் தமிழகத்துக்கு பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 908 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நேற்று (ஆக. 26) அன்று 200 வார்டுகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி, 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளை செலுத்தியதில், பிற பெருநகரங்களை விட சென்னை மாநகராட்சி முதன்மையான இடத்தில் உள்ளது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மொத்தமுள்ள ஆசிரியர்களில் 90.11 சதவீதமும், இதரப் பணியாளர்களில் 89.32 சதவீதம் நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கும், இதரப் பணியாளர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழகம். இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 179 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டத்தில் 100% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 100% மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவின்படி, தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாளை (ஆக. 28) கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version