ஆப்கான் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுங்கள் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

ஆப்கான் விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்  அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆப்கான் மக்கள் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இது உலக நாடுகளுக்கான முடிவடையாத பிரச்சினை. இந்த விவகாரத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.

ஆப்கான் நாட்டில் கிரிக்கெட் மைதானம் கட்ட இந்திய 10 லட்சம் டாலர்கள் தொகையை வழங்கியது. அதே போன்று ஆப்கானில் நாடாளுமன்ற கட்டிடம், அணைகள் கட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்திய அரசு உதவி செய்துள்ளது. இப்படி நட்பு நாடாக ஆப்கானை பார்த்து வந்த இந்தியாவுக்கு, தற்போது தலிபான் வசம் ஆப்கான் சென்றுள்ளது சரியா, தவறா என்ற விவாதத்தை நிறுத்திவிட்டு, அடுத்த என்ன செய்ய வேண்டும் என இந்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும்.

ஆப்கான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய உலர் பொருட்கள் உள்பட பெருங்காயம் ஆகியவற்றை தலிபான்கள் தடை செய்துள்ள காரணத்தால், இந்தியாவில் உலர் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே போன்று வரும் நாட்களில் பெருங்காயத்தின் விலையும் கடுமையாக விலை உயரக்கூடிய ஆபத்து உள்ளது.

ஆகவே ஆப்கான் விவகாரத்தில் இனியும் இந்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காமல், இந்த விவகாரம் தொடர்பாக ஐநா சபையுடன் ஆலோசித்து, ஆப்கானில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஐநா அமைதி குழு அனுப்பி வைத்து, அங்குள்ள சூழல்கள் ஆய்வு செய்ய இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி ஆப்கானில் உள்ள தற்போதைய அதிகாரிகளுடன் பேசி, உணவு பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version