கருணாநிதியை விட 8 மடங்கு வெற்றியை மு.க.ஸ்டாலின் பெறுவார் என்று துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலூரி்ல் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அமித்ஷாவுக்கு கண்டனம்
அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி, எதிர்க்கட்சியினரை தன் இஷ்டத்துக்கு வசை பாடிவிட்டு அமித் ஷா சென்றிருப்பது கண்டனத்துக்குரியது.
இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். அரசியலுக்கும், அரசுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாமல் ஜனநாயகத்தை சாகடித்து, சர்வாதிகாரத்தை தலை தூக்கியுள்ளனர். நெறிமுறைகளை மீறி, மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு நடந்துகொண்டதை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

புயல் பாதிப்பு எவ்வளவு?
தமிழக அரசுக்கு அவர் நற்சான்றிதழை வழங்கியதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட தயாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது, அதற்கான நிதியை தமிழக அரசு கேட்டது, இதுவரை புயல் பாதிப்புக்காக எவ்வளவு நிதியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளீர்கள் என மத்திய அரசு பட்டியலிட தயாரா ?

8 மடங்கு வலிமை
உத்தமர் போல் பேசுகிறார் அமித் ஷா. நேற்று வரை ஒருவரை ஒருவர் வசைபாடியவர்கள், இன்று ஒன்று சேர்ந்துள்ளார்கள். அ.தி.மு.க.வினரும் அவர்களுக்கு அடிமை போல் நிற்கிறார்கள். அமித்ஷாவின் பேச்சு தி.மு.க.வை மிரட்டும் தொனியில் உள்ளது. தி.மு.க.வை கிள்ளுக்கீரையாக யார் கருதினாலும், அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். மு.க.ஸ்டாலின் கருணாநிதியை விட 8 மடங்கு வெற்றி பெற்று தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கும் வல்லமை ஸ்டாலினுக்கு உண்டு.

தபால் ஓட்டு
ஓ.பி.எஸ். மகன் தற்போது எம்.பி-யாக உள்ளாரே ? அது வாரிசு அரசியல் இல்லையா ? எங்களுடன் நேரடி விவாதத்துக்கு அமித் ஷா தயார் என்றால், நாங்களும் தயாராக உள்ளோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தபால் ஒட்டு முறையை எதிர்த்து தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.




