ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? – இன்று கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம்!!

சசிகலாவிற்கு ஆதரவாக பேசியதாலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதால் வெடித்த சர்ச்சை காரணமாக அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று நீக்கப்பட்ட சூழ்நிலையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை வேண்டும், வழிகாட்டுதல் குழுவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கும் நிலையில் அதிமுக என்ன செய்யப் போகிறது என்பதனை அறிய பல தரப்பினை சேர்ந்த அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்பதற்கான முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான திட்டமிடல் குறித்தும் செயற்குழு விவாதிக்கும் எனத் தெரிகிறது. வழிகாட்டுதல் குழுவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சோழவந்தான் மாணிக்கம், பாஜகவில் இணைந்துள்ள சோழவந்தான் மாணிக்கத்துக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம். மேலும், 11 பேர் கொண்ட குழு, 18 ஆகவும் உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர வழிகாட்டு குழுவின் அதிகாரம் என்ன என்பது குறித்தும் செயற்குழு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக திடீரென்று சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்தும் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், ஒற்றைத் தலைமையா? அல்லது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரட்டைத் தலைமை தொடருமா? என்பது குறித்தும் உறுப்பினர்கள் விவாதிக்ககூடும் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version