ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் அதன்பிறகு கருத்து தெரிவிப்பதாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்வதாகவும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பொதுக் குழுவில் முடிவு செய்வோம் என தேமுதிக தெரிவித்து வருகிறது. விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயிலுள்ள மாதா கோயிலில் இன்று பிரார்த்தனை செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், எந்தத் தேர்தலிலும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டுதான் தேமுதிகவை வளர்த்தெடுத்தார் விஜயகாந்த். எங்கள் இலக்கை அடைவதற்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருகிறோம். 3ஆவது அணிக்க வாய்ப்பிருந்தால் அதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறிய விஜய பிரபாகரன், ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.
“ரஜினிகாந்த் மீது மிகப்பெரிய மதிப்பு உள்ளது. அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி பிறந்தநாளன்று மக்களை சந்திக்கவில்லை. அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன்பிறகு நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்” என்று ரஜினியின் அரசியல் வருகையை சீண்டினார் விஜய் பிரபாகரன்.
read more: அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு: மார்க்சிஸ்ட் புதிய அறிவிப்பு!
மேலும், “ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடபெறுகிற தேர்தல் என்பதால் இது அனைத்து கட்சிகளுக்குமே முதல் தேர்தல் போன்றதுதான். பயம் காரணமாகவே தேமுதிக முன்கூட்டியே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. தேமுதிக பொறுமையாக பிரச்சாரத்தை ஆரம்பித்தாலும் வலிமையாக வெற்றிபெறும்” என்றும் கூறினார். தேர்தலில் போட்டியிடுவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.




