சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூரில் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல் குறித்து கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். மக்கள் நீதி மய்யத்துக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன.
இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம். டிசம்பர் 13ஆம் தேதி கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அவர் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்கனவே உறுதிசெய்துவிட்ட நிலையில், எந்தத் தொகுதியை கமல்ஹாசன் தேர்வு செய்துள்ளார் என்ற விவாதங்களும் தற்போதே எழுந்துள்ளன. தான் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள மயிலாப்பூரில் கமல்ஹாசன் போட்டியிடலாம் என்றும் அதே சமயம் தன்னுடைய சொந்த ஊரான பரமக்குடியில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது, மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடுவதாக வெளியான தகவல், வெறும் தகவல்தான். அதை நான் சொல்லவில்லை. ஆனால், கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவேன் என பதிலளித்தார். கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து இப்போது முடிவு சொல்ல முடியாது என்றும் கூறினார்.
read more: தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த ஆகும் செலவு தெரியுமா?
மக்கள் நீநி மய்யத்திற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட கிடைக்க மாட்டார் என்று அமைச்சர் கருப்பண்ணன் கருத்தானது அது அவருடைய பிரார்த்தனை. ஆனால், எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார் கமல்ஹாசன்.




