அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்ட முதற்கட்ட ஊழல் புகார் பட்டியல் உள்துறை அமைச்சருக்கு சென்று விட்டதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை :
திமுக கொடுத்த அமைச்சர்கள் மீதான முதல்கட்ட ஊழல் புகார் பட்டியல் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், தேவைப்படும் போது அதிமுக அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் இரண்டாம் கட்ட பட்டியலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்பட டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழு நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து வழங்கியது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரைமுருகன் கூறியதாவது, 4 ஆண்டுகாலமாக அல்ல இந்த புகார் பட்டியல் இப்பொழுது தொடர்ந்து ஆதாரத்துடன் வழங்கி வருகிறோம். வருமானவரி துறையினரிடம் எவ்வளவு முறை கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததால் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்து வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், நாங்கள் கொடுத்த புகார் தூசி படியாமல் தமிழக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்கள். மத்திய உள்துறை தேவைப்படும்போது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.




