அதிமுகவினர் மூலமாக பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை அடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிமுகவினர் மூலமாக டோக்கன் விநியோக்கிக்கப் படுவதாக திமுக குற்றம்சாட்டியது.
பொங்கல் பரிசு டோக்கன் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் நேரில் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் தெரிவித்திருந்தது. ஆனாலும், அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறது என முதல்வர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் இதுதொடர்பாக வழக்கறிஞர் பி.வில்சன் முறையிட்டுள்ளார். அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரூ. 2,500 க்கான டோக்கன்கள் அதிமுகவினர் மூலமாக வினியோகிக்கப்படுவதாகவும், இதில் பெரும்பான்மை பயனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
டோக்கனில் அமைச்சர் வேலுமணியின் புகைப்படம் இருப்பதை புகைப்படமாக நீதிபதிகளிடம் சமர்பித்த அவர், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள், பெயர்கள் இல்லாமலும், அதிமுகவின் சின்னம் மற்றும் ஸ்டிக்கர் இன்றி பொங்கல் பரிசு டோக்கனை விநியோகிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.




