திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றன. மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லீம் லீக், மமக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் தொடர்கின்றன. யாருக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்னும் விவாதமும் தற்போதே துவங்கிவிட்டன.
இதனிடையே நவம்பர் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் துவக்கிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தென்சென்னையில் திமுக சார்பில் பொங்கல் விழா தியாகராய நகரில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். நான் வெறும் டிரெயிலர் மட்டும்தான். தலைவர்தான் மெயின் பிக்சராக வருவார் என்று கூறினார். மேலும், மக்களவைத் தேர்தலில் கொடுத்த வெற்றியை இப்போது அளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம். ஏற்கனவே ஜெயலலிதாவையே ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
read more: கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர்களை சந்தித்த ராமதாஸ் விளக்கம்!
234 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி, “சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறார் தலைவர். அதுபோன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் என்னை சூழ்ந்துகொண்டு, இந்த முறை திமுகதான் போட்டியிடும் என்பதற்கு உத்தரவாதம் கேட்கிறார்கள். அதனால் நான் தலைவரிடம், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைக் கொடுங்கள், ஆனால் திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளேன்” என்று கூறினார்.




