கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் நிற்பதில் தவறில்லை என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுகவின் கணேசமூர்த்தி, விசிக ரவிக்குமார், ஐஜேகே பாரிவேந்தர், கொமதேக சின்ராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றனர். இதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதனிடையே திமுக கூட்டணியில் சின்னம் இல்லாத கட்சிகள் புதிய சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் எனவும் அதனால் சில வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது தொடர்பாக திமுகவில் ஆலோசனை நடந்து வருகிறது.
ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் தனித் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் தனிச் சின்னத்தில்தான் எங்கள் கட்சி போட்டியிடும் என அறிவித்துவிட்டார். விசிக தலைவர் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்தார்.
read more: இப்படி இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கமல்ஹாசன்
இந்த நிலையில் வேலூரில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது திமுகவுக்கு பாதகமா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.அதற்கு, “ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கை உள்ளது. ஆகவே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச் சின்னம் கோருவதில் என்ன தவறு இருக்கிறது. அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார் துரைமுருகன்.




