அதிமுக இரண்டாக உடையும் எனவும், பன்னீர்செல்வம் பிரிவார் என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை இதுவரை ஏற்றுக்கொள்ளாத கூட்டணி கட்சியான பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமை அறிவிக்கும் எனக் கூறி வருகிறது. இதுபோலவே அமைச்சர்களும் பாஜக தேசிய தலைமைதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது. எனினும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம்? என்பது கண்டுபிடிக்கப்படும். அவர்களைக் கொண்டு வந்து கூண்டில் ஏற்றுவோம். அவர்களைக் கொண்டு வந்து மக்கள் முன்னால் நிற்க வைப்போம் என்றார்.
அரசின் பணமான பொங்கல் பரிசை அதிமுகவின் பணம் போல முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் படத்தைப் போட்டு டோக்கன் விநியோக்கிறார்கள் எனவும், பொங்கல் பரிசை நாங்கள் தடுப்பதாக முதல்வர் கூறுகிறார். நாங்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. நியாயமாக கொடுக்க வேண்டும் என்றுதான் கொடுக்கச் சொல்லுகிறோம் என்றும் ஸ்டாலின் விவரித்தார்.
read more: அமைச்சர்கள், பாஜகவினர் சொல்வதை கேட்க வேண்டாம்: திண்டுக்கல் சீனிவாசன்
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம் என்ற அவர், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்கள். இரண்டு நாட்களாக வேறு தகவல்கள் வருகின்றன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக டெல்லி தலைமை முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர்களே கூறி வருகிறார்கள். எப்போது பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கழண்டுபோகிறார் எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அதிமுக உடையப்போகிறது. முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் முதல்வரையே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என பேசி முடித்தார்.




