பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை தொடப்போகும் மூன்றாவது அலை… உஷார் நிலையில் அதிகாரிகள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

காட்டுத்தீ போன்று ஒமிக்ரான் தொற்று வேகமாக நாடுகளிடையே பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் பரவல் பல நாடுகளை மீண்டும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 21 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், மும்பையில் மேலும் இரண்டு பேருக்கு நேற்று (டிசம்பர் 6) ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 37 வயதான நபர், மற்றொருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 36 வயதானவர். இருவருமே கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள். அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகிறோம். இவர்களுடன் முதல்நிலை தொடர்பில் இருந்த ஐந்து பேரும், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 315 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், “ஒமிக்ரான் வைரஸ் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். வைரஸின் பரவலைப் பொறுத்து ஒன்றிய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் ஆலோசனை நடத்தி தேவைப்படும்பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தற்போது இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மூன்றாவது அலை

ஒமிக்ரான் மூலம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில் பிப்ரவரி மாதத்துக்குள் உச்சத்தை எட்டக்கூடும். மேலும் நாட்டில் ஒரு நாளைக்கு 1-1.5 லட்சம் வரை நோய் பாதிப்புகள் வரக்கூடும். ஆனால், இது இரண்டாவது அலையை விட லேசானதாக இருக்கும். ஒமிக்ரான் வேகமாகப் பரவி வந்தாலும், டெல்டா வைரஸில் காணப்பட்ட தீவிரம், இந்த தொற்றில் இல்லை. தென்னாப்பிரிக்காவில் அதிகளவிலான மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தொற்று பரவல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் ஒமிக்ரான் வைரஸ் குறித்த தெளிவான பிம்பத்தை நமக்கு தரும் என்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) விஞ்ஞானியான மனிந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் தொற்றால் ஆக்சிஜன் குறைபாடு அல்லது மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Exit mobile version