வெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன..? முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..!

உலக நாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவ பொருட்களின் உதவிகள் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனாவை எதிர்க்க திறம்பட ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு இன்று வலியுறுத்தியது. மேலும் உதவியை பெற்ற ஒவ்வொரு மருத்துவ நிறுவனத்தையும் பட்டியலிட்டுள்ளது.

அரசாங்கம் தனது அறிவிப்பில், “உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் உலகளாவிய சமூகம் உதவியுள்ளது. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் போன்றவை பல நாடுகளால் வழங்கப்படுகின்றன.

மருத்துவ மற்றும் பிற நிவாரண மற்றும் துணைப் பொருள்களை திறம்பட விநியோகிப்பதற்காக இந்தியாவுக்கு கிடைத்த ஆதரவு பொருட்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிமுறை வைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளது.

அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், தாய்லாந்து, தைவான் போன்ற பல நாடுகள் இந்தியாவுக்கு இரண்டாவது கொரோனா அலைக்கு எதிரான போராட்டத்தில் உதவுகின்றன.

ஏறக்குறைய 40 லட்சம் எண்ணிக்கையிலான 24 வெவ்வேறு வகை பொருட்கள் மாநிலங்களில் உள்ள 86 மருத்துவ நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியது.

பைபாப் இயந்திரங்கள், ஆக்சிஜன் (ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள், பல்சி ஆக்சிமீட்டர்கள்), மருந்துகள் (ஃபிளவிபரிவிர் மற்றும் ரெம்டெசிவிர்), பிபிஇ (கவர் ஆல்கள், என்-95 முககவசங்கள் மற்றும் கவுன்கள்) ஆகியவை முக்கிய வகை உபகரணங்கள் ஆகும்.

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த பொருட்கள் கிடைத்தன. வெவ்வேறு இடங்களில் இருந்து உதவிப் பொருட்கள் வந்துகொண்டே இருப்பதால், தேவைக்கேற்ப மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் அரசு கூறியது.

Exit mobile version