ஊரடங்கால் காதலியை பார்க்கமுடியவில்லை என வருந்திய இளைஞர்; மும்பை போலீசாரின் ரிப்ளே வைரல்!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக, தனது கேர்ள் பிரண்டை பார்க்க முடியவில்லை என இளைஞர் ஒருவர் மும்பை போலீசாரை டாக் செய்து டுவிட் போட, அவர்களது சந்திப்பு அத்தியாவசிய நடவடிக்கை கிடையாது என மும்பை போலீசார் ரிப்ளே செய்திருக்கின்றனர். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவில் கடந்த வாரம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டும், வண்ண ஸ்டிக்கர் ஒட்டுவது என மும்பை போலீசார் முடிவு செய்து நடைமுறைப்படுத்தினர். டுவிட்டரில் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் பல உண்மையானவை என்றாலும், அனைவருக்கும் பதிலளித்து வரும் வேலையை செய்து வருகிறது.

இந்நிலையில் மும்பைவாசியான அஸ்வின் வினோத் என்பவர், தனது காதலியை சந்திக்க, தன் வாகனத்தில் என்ன ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கேட்டு டுவிட் செய்திருக்கிறார். மும்பை போலீசாரை டாக் செய்து அவர் பதிவிட்ட டுவிட்டரில், ‛நான் எனது காதலியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரை சந்திக்க செல்ல வேண்டும் என்றால், என் வாகனத்தில் நான் என்ன நிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்’ என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு மும்பை போலீசார் மரியாதையுடன் அவருக்கு அளித்த உடனடி பதிலில், ‛உங்கள் கஷ்டத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது அத்தியாவசிய தேவை அல்லது அவசர வகைகளில் வராது. இது ஒரு சிறு பிரிவு மட்டுமே; நீங்கள் ஆண்டாண்டு காலம் இணைந்து இருக்க வாழ்த்துகிறோம்’ என பதிலளித்துள்ளது. இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version