பாரா கிளைடிங் செய்தபடி 8 ஆயிரம் அடி உயரத்தில் பாட்டுப்பாடிய மனிதர்! அதுவும் ஏஆர் ரகுமானின் பிரபல பாடல்!

இமாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில், பாரா கிளைடிங் செய்தபடி, ஏஆர் ரகுமானின் ‘மா துஜே சலாம்..’ பாடலை ஒருவர் பாடியபடி, உகேலே கருவியை இசைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு உயரத்தில் பறந்தபடி பாடினாலும், அவரது பாடலில் உள்ள தெளிவு, நெட்டிசன்களை வியப்படைய வைத்திருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், கடந்த ஆகஸ்ட் 1997 ஆம் ஆண்டு, தேசபக்தி ஆல்பம் ஒன்றை, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டார். ‘மா துஜே சலாம்..’ என்ற பாடல் இப்போது கேட்டாலும், கேட்பவர்களுக்கு புத்துணர்ச்சியையும், தேச பக்தியும் ஏற்படும் வகையில் உள்ளது. அந்த பாடலை ஒருவர் பாராகிளைடிங் செய்தபடி பாடும் வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேற்கே இமாச்சலத்தின் காங்க்ரா மாவட்டத்தில், ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கில் உள்ளது பிர்-பில்லிங். உலகின் மிகச்சிறந்த பாராகிளைடிங் தளங்களில் இதுவும் ஒன்று. மேலும் இது விளையாட்டு தொடர்பான சர்வதேச நிகழ்ச்சிகளை நடத்தவும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில் மலையேற்றம் மற்றும் முகாமிடுவதற்காகவும், சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள்.

இந்நிலையில், இங்கு ரூபேஷ் மைட்டி என்பவர், கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் பாராகிளைடிங் செய்தபடி, அச்சுபிசகாமல், ‘மா துஜே சலாம்..’ பாடலை பாடுகிறார். அத்துடன் பாடலுக்கு தகுந்தவாறு உகேலே கருவியையும் அவர் இசைக்கிறார். அவ்வளவு உயரத்தில் பறந்தபடி பாடினாலும், சுருதி சுத்தமாக அவரது பாடல் கேட்கிறது. அந்த வீடியோவை ரூபேஷ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட, 3 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்து, வைரலாகி உள்ளது.

Exit mobile version