மனைவியின் டார்ச்சரால் 21 கிலோ எடை குறைந்தேன்- விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2012-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

திருமணமான போதிலிருந்தே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு நிலவி வந்தது. காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வரும் கணவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எனது மனைவி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தி வந்தார். சிறிய வி‌ஷயங்களுக்காக சண்டையிடுவார். நாளடைவில் இது சரியாகி விடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவரது நடத்தை கொஞ்சமும் மாறவில்லை.

என் மனைவி என்னை நாள்தோறும் வேதனைப்படுத்தி வந்தார். திருமணத்தின் போது வரை 74 கிலோவாக இருந்த எனது எடை 53 கிலோவாக குறைந்துவிட்டது. அதாவது மனைவியின் டார்ச்சரால் 21 கிலோ எடை குறைந்து விட்டது. இதனால் எனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்தார். தனது கணவனை தான் எப்போதும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தியதாக தெரிவித்தார். திருமணமான 6 மாதங்களிலேயே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக்காக தன்னை கொடுமைபடுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வழக்கை விசாரித்த குடும்பநல கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அந்த பெண் தனது கணவர் குடும்பத்திற்கு எதிராக பொய்யான புகாரை தெரிவித்து இருப்பதாக குடும்ப நல கோர்ட்டு தெரிவித்து விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Exit mobile version