தமிழக சட்டப்பேரவை; இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்…!

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டது முதல் இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. நேற்று முன்தினம், முதுநிலை மாணவர்களுக்கும், நேற்று இளநிலை மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று நீட் தேர்வு தோல்வி அச்சத்தால் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதனையடுத்து ஏற்கனேவே இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவன் தனுஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது.

இதற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

Exit mobile version