வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வருகிறது குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.

நேற்று திங்கள்கிழமை பெய்த தொடர் மழையால் தூத்துக்குடி திக்கு முக்காடியது. நகரின் பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பிறகு மழை பெய்வது நின்றது.
இதனையடுத்து மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மாநகர பகுதிகளில் சுமார் 40 மோட்டார்கள் மூலம் மழைநீர் உறிஞ்சப்படுகின்றது. அதேபோல் டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது.

நேற்று 2-வது நாளாக மீண்டும் மழை நீடித்தது. காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. 11 மணி முதல் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை பணிகள் நடந்து வருகின்றது. அந்த பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் அந்த சாலை முழுவதும் மழைநீர் தேங்கி கிடக்கின்றது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சுமார் ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை கடந்தே நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் வார்டுகளுக்கு செல்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. வடகிழக்கு பருவமழையால் இதுவரை 33 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 169 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.




