காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துக் கட்டப்பட்ட மசூதியில் அகழ்வாராய்ச்சி நடத்த அனுமதி..! நீதிமன்றம் உத்தரவு..!

வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அருகிலுள்ள கியான்வாபி மசூதி ஆகியவற்றில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ) அகழ்வாராய்ச்சி நடத்துவதற்கு ஆதரவாக வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து ஏ.எஸ்.ஐ ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து விரைவில் வளாகத்தில் ஆய்வைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரணாசியில் உள்ள நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பில் வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி 2019 டிசம்பரில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் ஏ.எஸ்.ஐ. முழு கியான்வாபி வளாகத்தையும் ஆய்வு செய்யுமாறு கோரினார். அவர் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வரரின் அடுத்த நண்பர் என்று மனுவை தாக்கல் செய்திருந்தார். 2020 ஜனவரியில், அஞ்சுமான் இன்டெசாமியா மசூதி குழு இந்த மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தாக்கல் செய்தது.

காசி விஸ்வநாதர் கோவில் மகாராஜா விக்ரமாதித்யாவால் சுமார் 2,050 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று மனுதாரர் வாதிட்டார். ஆனால் முகலாய பேரரசர் ஒளரங்கசீப் 1664’ஆம் ஆண்டில் கோயிலை அழித்து அதன் எச்சங்களை பயன்படுத்தி கோயிலின் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதி என்று அழைக்கப்படும் ஒரு மசூதியை கட்டினார். 
இந்நிலையில் கோவில் நிலத்திலிருந்து மசூதியை அகற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்து, அதன் உடைமைகளை கோவில் அறக்கட்டளைக்கு திருப்பித் தருமாறு மனுதாரர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கியான்வாபியில் வழிபாட்டுக்கு அனுமதி கோரி சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பாக 1991’ல் முதல் மனு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஓரளவு இடிக்கப்பட்ட கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதால், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பொருந்தாது என்று மனுவில் வாதிட்டது. கோவிலின் பல பகுதிகள் இன்றும் உள்ளன. 1998 ஆம் ஆண்டில், அஞ்சுமான் இன்டெசாமியா மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை நாடியது. கோவில்-மசூதி தகராறு ஒரு சிவில் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியாது என்றும் அது சட்டத்தால் தடைசெய்யப்பட்டது என்றும் கூறி, கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்த கீழ் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் நிறுத்தியது.

கடந்த ஆறு மாதங்களில் உயர்நீதிமன்றம் தடையுத்தரவை நீட்டிக்காததால், பிப்ரவரி 2020’இல், மனுதாரர்கள் மீண்டும் கீழ் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

Exit mobile version