1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : இன்று முக்கிய ஆலோசனை!!

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. 50 சதவிகித மாணவர்கள் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. முழு கொரோனா தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version