சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு, உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28ம் தேதியும் திறக்க அனுமதித்தது.
இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி சென்னை கோயம்பேடு 4வது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் செயலாளர் செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கனிகள் அங்காடியில் போதுமான வசதிகள் இல்லை எனவும், 700 பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், அங்கு 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சில்லறை விற்பனைக்கு அனுமதியளித்ததே தொற்று பரவலுக்கு காரணம் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோயம்பேடு அங்காடி பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்ட பின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு டிசம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சந்தை நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




