இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி? – நிபுணர் குழு இன்று ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படலாமா என்பது குறித்து தேசிய நிபுணர் குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு,முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என தற்போது வரை மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,தற்போது ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவத் தொடங்கி உள்ள நிலையில்,இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது வரை இந்தியாவில் 21 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,சீரம் நிறுவனம் தனது தயாரிப்பான கோவிஷீல்டின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரிய நிலையில்,ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து ,தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி,முதியோர் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கலாமா? என்றும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version