ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறும்!: அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முற்றிலுமாக வெளியேறும் என அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். தலீபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது விமானத்தை மோத செய்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து தலீபான் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் குவித்தது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தலீபான் தலைவர் பின்லேடனையும் அமெரிக்கா சுட்டுக்கொன்றது. தற்போது ஆப்கானிஸ்தானில் பெருமளவு அமைதி திரும்பியுள்ள நிலையில் அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறி வருகின்றன.

இந்நிலையில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 20ம் ஆண்டு நினைவுநாளான செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப பெறுவதற்கான நடைமுறைகளை அமெரிக்கா செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும். இந்த வெளியேற்றம் அவசர அவசரமாக நடைபெறாது. பலத்தை குறைக்கும் போது தலீபான்கள் தாக்குதல் நடத்தினால் எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எங்களையும், எங்கள் கூட்டாளிகளையும் பாதுகாப்போம் என்று தலீபான்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் இல்லாத நிலையான ஆப்கானிஸ்தான் உருவாக இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என ஜோ பைடன் கேட்டுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து, 36 நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் வீரர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வீரர்களையும் அமெரிக்கா திரும்ப பெறுவது சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

Exit mobile version