ஆந்திராவில் மீண்டும் அதிகரிக்கும் மர்ம நோய்:குடிநீர் குடிக்க அஞ்சும் பொதுமக்கள்

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் மக்களிடையே மீண்டும் அதிகரிப்பதால் குடிநீர் குடிக்க பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

ஏலூர்:

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ஏலூரில் கடந்த ஒரு வார காலமாக பள்ளி குழந்தைகள்,பெற்றோர்கள்,வயதானவர்கள் என்று அனைவரும் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தனர்.அதனை தொடர்ந்து அடுத்தடுத்த 2 நாட்களில் 400 க்கு அதிகமானோர் இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டு ஏலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நோயின் தன்மையால் பாதிக்கபட்டவர்கள் வித்தியாசமான முறையில் குரல் எழுப்பியும்,கை மற்றும் கால்கள் வீங்கியும் உள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நோயின் தன்மை குறித்து கண்டறிய உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து டெல்லி, புனே நகரங்களில் இருந்தும், உலக சுகாதார மையத்தில் இருந்தும் மருத்துவக் குழுவினர் ஏலூர் பகுதியில் முகாமிட்டு பரிசோதனையை தொடர்ந்தனர்.இந்த பரிசோதனை முடிவில்,பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய பால் மற்றும் குடிநீரில் காரீயம், நிக்கல் போன்ற கன உலோகங்கள் கலந்து இருந்ததே இந்த நோய்க்கான காரணம் என அறிக்கையை வெளியிட்டது.

நேற்று முன்தினம் வரை புதிய நோயாளிகள் யாரும் வராத நிலையில்,இந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்டதாக கருதப்பட்டது.இந்த நிலையில் நேற்று மீண்டும் 15 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஏலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த தொடர் மர்ம நோயால் ஏலூர் பகுதி மக்கள் குடிநீர் குடிக்கவே அச்சப்பட்டு கடைகளில் இருந்து குடிநீர் பாட்டில்களை வாங்கி குடித்து வருகின்றனர்.மேலும் பாலிலும் இந்த மர்ம நோய் தாக்குதல் ஏற்படுவதால் அதன் விற்பனையும் தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version