கேரள மாநிலத்தில், திருமணம் நடந்தால் பிரிந்து விடுவோம் என்று எண்ணி, தோழிகள் இருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமிர்தா மற்றும் ஆர்யா இருவரும் கல்லூரி தோழிகள். 21 வயதாகும் இவர்கள் இருவரும், கொல்லத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர்.
கல்லூரியில் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வந்தனர். விடுமுறை நாட்களிலும் கூட இருவரும் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்று எங்குச் சென்றாலும், இருவரும் சேர்ந்து செல்வதுதான் வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா காலத்திலும் இவர்களது நட்பு தொடர்ந்துள்ளது.
தற்போது அமிர்தா இறுதி ஆண்டு படித்து வருவதால், படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க அமிர்தாவின் பெற்றோர் முடிவு செய்தனர். எனவே பல இடங்களில் அமிர்தாவிற்கு வரன் தேடி வந்ததாக தெரிகிறது. இது அமிர்தாவிற்கு பிடிக்காததால், இது குறித்து அமிர்தா தனது தோழி ஆர்யாவிடம், தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும் என்றும், எனவே நான் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். ஆர்யாவிற்கும், அமிர்தா திருமணம் செய்துக் கொள்வதில் உடன்பாடில்லை என்பதால், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இதுக்குறித்து அமிர்தா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தப் பெற்றோர், அமிர்தாவுக்கு அறிவுரை கூறி அவரை சமாதானம் செய்து, திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இதை விரும்பாத அமிர்தா, நடந்ததைப்பற்றி தனது தோழி ஆர்யாவிடம் கவலையுடன் தெரிவித்துள்ளார். இதில் இருவரும் மனஅழுத்ததில் இருந்துள்ளனர். இறுதியில், திருமணம் செய்துக்கொண்டால் நிச்சயமாக பிரிந்து விடுவோம். எனவே ஒன்றாக சாவோம் என்றுக்கூறி, இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். பின்னர், இருவரும் வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர், இரவு சுமார் 7 மணி அளவில் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்த அமிர்தா மற்றும் ஆர்யா இருவரும், கைகளை கோர்த்தவாறு ஆற்றிற்குள் குதித்துள்ளனர். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், மாணவிகள் 2 பேரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மறுநாள் இருவரின் உடலும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் தோழிகள் இருவர் பிரிந்து விடுவோம் என்று அஞ்சி தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




