மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது, துணைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி :
வேளாண்துறை தொடர்பான விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, ஆகியவற்றை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, மத்திய அரசின் முடிவு விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாய நிலத்தை தாரை வார்க்கும் விதமாகவும் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதோடு, மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரி திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அங்கிருந்த அவை விதி குறிப்பு புத்தகத்தை கிழித்து எறிந்தனர். அப்போது, அவைத்தலைவர் மேஜையில் இருந்த மைக்கும் சேதமடைந்தது.
தங்களது கோரிக்கையை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக, 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.
மேலும், நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன், டோலா சென்,
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சதாவ், ரிபுன் போரா, சையது நாசிர் ஹுசைன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.கே.ராகேஷ், இளமாறம் கரீம் மற்றும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.