பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமார் அப்பகுதியில் சலவைத் தொழில் செய்து வருகிறார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக லாலன் குமார் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லாலன் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். ஐந்து மாதம் சிறைவாசம் அனுபவித்த லாலன் குமார், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த பெண்களுக்கு சமூக சேவை செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்ற ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், ‛அடுத்த 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து, சலவை செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.

நீதிமன்றத்தின் இந்த நிபந்தனையால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக, அக்கிராமத் தலைவர் நசீமா கட்டூன் தெரிவித்தார். மேலும், இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

Exit mobile version