உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் ஹப்பூர் பகுதியை அடுத்த தானா கர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தல்பத் என்பவன் கடத்தி சென்றான். அன்றிரவு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான் தல்பத். மயக்கத்தில் கிடந்த சிறுமியை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தல்பத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவனை சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு ஹபூரைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் சிறப்பு நீதிபதி (போக்சோ) பினா நாராயண் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட தல்பத்தை சாகும் வரையில் சிறையில் அடைக்க, ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த சம்பவம் நடந்த 50 நாட்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து, தற்போது குற்றவாளிக்கு தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




