இமாச்சல பிரதேசத்தில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல் தொடர்பாக 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது.

இமாச்சல பிரதேசம் :
இமாச்சல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த மானவ் பாரதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு போலியான பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்கலைக்கழகம் நீண்ட காலமாக போலி பட்டங்களை வழங்கி வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது. மேலும் அச்சிடாத பட்டச் சான்றிதழ்கள், ஸ்டாம்புகள் இடமாற்றத்திற்கான வெற்றுப் பட்டங்கள், மதிப்பெண் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.எனவே ,பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் பெரும் கேள்வியாய் எதிரொலித்தது. போலி பட்டம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படுமா என காங்கிரஸ் எம்.எல்.ஏ ரஜீந்திர ராணா கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், இந்த வழக்கை சி.ஐ.டி பிரிவைச் சேர்ந்த 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
இந்த மோசடி தொடர்பாக விசாரிக்கும்படி அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை கேட்டிருப்பதாகவும், சி.ஐ.டி பிரிவின் ஏ.டி.ஜி.பி வேணுகோபால் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.மோசடி பற்றி தெரியவந்ததும் போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.மேலும் 2 பேர் சிறையில் உள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.




