– மதுநிகா சுரேஷ்

“என்னப்பா அண்ணாமலை முடிவுக்கு வந்தியா இல்லையா?”
“ம்ம்…. கொஞ்சம் யோசனையா இருக்கு”
“ரொம்ப யோசிக்காதப்பா வேண்டாம்னா விட்டிரு” என்றார் பெருமாள்.
“அதவிடு பெருமாளு… இன்னிக்கு கூட்டத்திற்கு எல்லாத்தையும் வர சொன்னியா?”
“அதெல்லாம் எல்லாத்தையும் வர சொல்லிட்டேன். சாயங்காலம் எல்லாரும் வந்துருவாங்க. இன்னிக்கு சேகரு ஜே.கே. கதைய சொல்லப்போறான்”
“ஆமாப்பா நான் எதையும் கையில எடுத்துட்டுப் போக முடியாது. இந்த நினைவுகள் மட்டுந்தான் எங்கூட வரப்போவுது” என்று ஊஞ்சலில் ஆடியபடி அண்ணாமலை புன்னகைத்தார்.
“சரிப்பா பசங்கக் கிட்ட கலந்துப் பேசுனியா?”
“கலந்துப் பேசுறதுக்கு என்னப்பா இருக்கு? அவங்களுக்குச் செய்ய வேண்டியதை செஞ்சாச்சு. நான் கிளம்புறப்ப ஒரு வார்த்தை ஃபோன்ல சொன்னாப் போதும். இப்பவே சொன்னா, மீதி இருக்குற ரெண்டு நாளும் பஞ்சாயத்துல போயிரும்”
“அதுவும் சரிதான்… சொத்து, பஞ்சாயத்துப் பெரிய தலைவலிதான்” என்று தலையை ஆட்டினார் பெருமாள்.
“கடைக்குட்டி விசாவ நினைச்சாத்தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. அவளுக்கு படிப்பு முடிய மூணு வருஷம் இருக்கு. அதுக்கப்புறம் நான் வந்துருவேன். நல்லவேளை ஹாஸ்டல்ல தங்கி படிக்குறதால, பிரச்சனை இல்ல. கமலம் போனப்பிறகு நான்தான் அவளுக்கு எல்லாம்.”
“ரொம்ப உன்ன கஷ்டப்படுத்திக்காதப்பா. வேணாம்னா விட்டுரு. இது உன்னோட முடிவுதான். யாரும் உன்ன கட்டாயப்படுத்தல”
“எனக்கு கமலத்தைவிட்டு தூரமா இருக்க முடியுமானு முயற்சி செய்யப்போறேன். இப்பலாம் இலக்கியம் கூட அவளைத்தான் அதிகமாக ஞாபகப்படுத்துது. இப்ப நான் எடுக்குற முடிவு எனக்கு நான் கொடுத்துக்குற தண்டனையா கூட இருக்கலாம். இருக்குறப்போ முகத்தைப் பார்த்துக்கூட பேச நேரத்தை ஒதுக்குல. இப்ப மறக்க முடியாம பயந்து, வீட்டை விட்டே ஓடுறேன்”
பெருமாளுக்கு ஒன்றுமே பேச முடியல “சரிப்பா நான் கிளம்புறேன்… சாயங்காலம் வரேன்.”
பெருமாள் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர். தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நல்ல வாசிப்பு பழக்கம் உடையவர். கமலத்தின் மறைவிற்குப் பிறகு அண்ணாமலை தனிமையில் தவித்தபோது, பெருமாள்தான் அவருக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். இருளில் தவித்தவனுக்கு ஒளி கிடைத்ததைப் போல் அண்ணாமலை கொஞ்சம் தெளிவாவதற்கு அவர்தான் காரணம்.
இருவரும் தினமும் படித்த புத்தகங்களைப்பற்றி, நேரம் போவதறியாமல் பேசுவார்கள். நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய கலந்துரையாடல் கூட்டம் பெரிதானது. நிறைய நண்பர்கள் புத்தக விவாதத்தில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் அண்ணாமலையின் வீடுதான் சந்திக்கும் இடம்.
அன்று மாலையும் இலக்கியக்கூட்டம் தொடங்கிற்று. சேகர் கதையைச் சொல்ல ஆரம்பித்தார், “ஒரு மனிதன் இறக்கும்போது இன்னொரு மனிதனுக்கு ஞானம் பிறக்கிறது. சாவில் பிறந்த ஞானம் வாழவா பயன்படும்.” என்று மூங்கில் கதையை முடித்தார். கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. இது வழக்கம்தான்.
கதை தொடங்கும் முன் எல்லாரும் கிண்டல், கேலி என்று ஆரவாரமாக இருப்பார்கள். ஆனால் ஜே.கே., தி.ஜா, நாகராஜன், புதுமைப்பித்தன் போன்றோர் எழுதிய கதைகளைக் கேட்டப்பிறகு, பேச்சற்றவர்களாய் பல சிந்தனைகளுக்கு ஆளாகி அமைதியாகி விடுவார்கள். கூட்டம் களைந்துப்போன பிறகும், அந்த கடைசி வரிகள் அண்ணாமலையின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆம் கமலத்தின் மறைவு அவருக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
ஐந்து பிள்ளைகள், ஒரு காலத்தில் இந்த வீடு இவ்வளவு அமைதியாக இருக்காது. அதோ இருக்கிறதே சமையலறை… அதில் எப்போதும் சமையல் நடந்துக்கொண்டே இருக்கும். இந்த கூடத்தில்தான் கமலம் மிளகாய், மல்லி, வடாம், மஞ்சள் என்று எதையாவது காய வைத்துக்கொண்டிருப்பாள். வீட்டிற்குள் நுழையும்போதே சமையல் வாசனை மூக்கைத் துளைக்கும். அண்ணாமலைக்கு அம்மியில் அரைத்துச் செய்யும் சமையல்தான் பிடிக்கும் என்று, சாகும் வரைக்கும் மிக்ஸியை பயன்படுத்தாமல் சமைத்த மகராசி.
கமலம் இறந்து பதினைந்து நாட்கள் கூட ஆகாத நிலையில், பிள்ளைகள் அண்ணாமலையைத் தனியாக இவ்வளவு பெரிய வீட்டில் இருக்க வேண்டாம்….. தங்களுடன் வந்து தங்கும்படி கூறினார்கள். அவர்கள் அக்கறையை எண்ணி சந்தோஷப்படும் முன்னரே, அடுத்த வார்த்தையாக இந்த வீட்டை விற்றுப் பிரித்துக் கொடுக்கும்படி கூறியதும், அண்ணாமலைக்கு அப்போதுதான் தான் தனிமரம் ஆன நினைவு வந்தது. அன்றிலிருந்து அவர் பிள்ளைகளிடம் பேசுவதைத் தவிர்த்தார். விசாவைத் தவிர யாரிடமும் பேசுவதில்லை.
அண்ணாமலை ஏதோ உணர்ந்தவராய் அலைபேசியை எடுத்தார். தன்னுடைய நண்பரான ஒரு வக்கீலிடம் சில விவரங்களைக் கூறினார். ஒரு கடிதத்தை விசாவிற்கு எழுதினார்.
மறுநாள் பெருமாள் வந்தபோது, அண்ணாமலை வேள்பாரியைப் படித்துக் கொண்டிருந்தார்.” என்னப்பா இரவு தூங்கலையா? கண்ணு சிவந்துப்போய் இருக்கு?”
“இல்லப்பா புத்தகத்த எடுத்துவிட்டுப் போகக்கூடாதாம். அதனால இன்னும் ஒரு நாளுல படிச்சு முடிக்கணும். ஆரம்பிச்சுட்டேன் முடிக்காம எப்படி போறது?”
“என்னதான் எடுத்துட்டு போலாம்?”
ஒண்ணுமே எடுத்துட்டுப் போகக்கூடாது. நமக்குத் தேவையான உடையை அவங்களே தருவாங்க. எளிமையான வாழ்க்கை. நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே பயிரிடணும். நாம் பயன்படுத்துற பாய், தலையணை, சமையலுக்கான மண்பாண்டங்கள், துடைப்பம், குடில் எல்லாம் நாமாகவே செய்யணும். நூறு பேர் கொண்ட ஆராய்ச்சி குழுக்களாகச் சேர்ந்து வேலை செய்யணும்.
இயற்கையோட இணைந்த வாழ்வு. உறவுகளைப் பார்ப்பதோ அலைபேசியில் பேசவோ, ஏன் புகைப்படங்கள் எடுத்துச்செல்லக் கூட அனுமதி கிடையாது. வாரத்திற்கு ஒருமுறை சில கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் கொடுப்பார்கள். அதைப் பூர்த்தி செஞ்சு கொடுக்கணும். அது அவர்களின் உளவியல் ஆராய்ச்சிக்கானது. கிட்டத்தட்ட கிப்புட்ஸ்(kibbutz) போன்ற ஒரு அமைப்பு. இங்கு யாருக்கும் எதுவும் சொந்தமில்லை. எல்லாருக்கும் எல்லாம் சொந்தம்.
ஒக்கினவாலதான் (okinawa) நீண்ட காலம் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் வாழ்க்கை முறையைக் குறித்து ஆராய்ச்சி செய்து, அதைப் பரிசோதிக்க இந்த உளவியல் மாணவர்கள் முயற்சி செய்கிறார்கள். எனக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை. அதனால் உறவுகளை விட்டுத் தூர இருந்து பழகிக்கொள்ள ஒரு சிறை வேண்டும். இந்த ஆராய்ச்சி தகவல் கிடைத்ததும், எனக்கு அது ஒரு வாய்ப்பாகக் கிடைத்ததைப் போல் உணர்ந்தேன்.”
“இன்னும் ஒரு நாள்தான் இருக்கு, இந்தப் புத்தகத்தை முடிக்கணும்”
“சரிப்பா… சரி நான் கிளம்புறேன்” என்று பெருமாள் கிளம்பினார்.
அவர் சென்றவுடன் அண்ணாமலை கமலத்தின் பீரோவைத் திறந்தார். அதில் உள்ள புடவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அது விசாவிற்கு என்று, மூத்த மகள்கள் எடுத்துக்கொண்டது போக விட்டுச் சென்றது.
அதில் திருமண புடவை இருந்தது. அதை மெல்ல முகர்ந்து பார்த்தபோது, அவருக்குக் கமலத்தின் உச்சிதனை முகர்ந்தது போல் இருந்தது….
– கதைப் படிக்கலாம் – 113
இதையும் படியுங்கள் : கயலும் காற்றாடியும்




