– த. அஜித்

நேரம் சரியாக இரவு 11 மணி இருக்கும். இந்த உறங்கும் வேளையில் கூட, கல்லூரி விடுதியில் பகல் போலத்தான் ஆட்டம் பாட்டம். ஆம், நான் இளங்கலை விலங்கியல் இரண்டாம் ஆண்டு பயில்கிறேன். இன்று மாலை இறுதி வகுப்பிலிருந்து என் மனம் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டே இருக்கிறது.
காரணம், இன்று வகுப்பில் எடுக்கப்பட்ட பாடம் “செவியும் செவியுணர் உறுப்புகளும்” மிக கூர்ந்து பாடங்களை கவனித்தது என் கண்கள். ஏனோ தெரியவில்லை, என் யோசனைகள் மட்டும் ஆண்டுகள் பல பின்னோக்கி சென்றது. அதுவே என் இரவு தூக்கத்தை கெடுத்தது… மனமோ பின்னோக்கிச் சென்று, முடிந்தக் காலத்தை மறு ஒளிபரப்பு திரையிட்டது.
மௌனிகா… என் சான்றிதழிலும், என்னை நெருக்கமாக தெரியாதவர்களும் அழைக்கும் பெயர். வீட்டிலும் என்னுடன் பழகியவர்கள் அழைப்பது என்னவோ அம்மு… என் செல்ல பெயர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறந்த முதல் நாள். புது ஆடை அணிந்துக்கொண்டு விடுமுறையில் நடந்தச் சம்பவங்களை பல பொய்களுடன் மெருகேற்றி பேசிக்கொண்டிருந்தோம். தாத்தா பாட்டி வீட்டில் செய்த குறும்புகள், அதற்காக வாங்கிய அடிகள், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது, மாமரத்தின் கிளையில் பாட்டியின் புடவையில் தொட்டில் கட்டியது, ஊஞ்சல் ஆடும்போது தொட்டில் அறுந்துக் கீழே விழுந்தது என ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டு பொழுதுகள் ஓடின.
பெரிய வகுப்பு ஒன்றும் இல்லை. ஏழாவது முடித்து எட்டாம் வகுப்பு சென்ற நாள் தான். இரண்டு நாள் கதைபேசி கடந்தன. மூன்றாம் நாளில் ஒரு பொண்ணு வந்துப் புதிதாக சேர்ந்தாள். நல்ல சிவப்பு நிற தோலுக்கு எடுப்பாக வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு இருந்தாள்.
எல்லோருக்கும் தட்டில் மிட்டாய் கொடுத்தப் பின், ஆசிரியர் அவளை போயி அமரு என்றால், என் அருகில் வந்து அமர்ந்தாள். என்னை பிடித்ததால் வந்து அமர்ந்தாளோ? அல்ல என் அருகில் அமர்ந்ததால் என்னைப் பிடித்ததோ தெரியவில்லை… நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
அழகியத் தோற்றத்தை கொடுத்த அவளுக்கு, பேசும் மற்றும் கேட்கும் திறனும் கொடுக்க மறந்து விட்டான் இறைவன். ஆனாலும் அவள் காட்டும் சைகைகளை நான் போக போக புரிந்துக்கொண்டேன். அவளுக்கும் என் மீது அதிக பாசம் ஏற்பட்டது. அவளால் பேசமுடியவில்லை என்றாலும், என் பெயரை மட்டும் ம்மூ… ம்மூ… என்றுக் கூப்பிடுவாள்.
எங்குச் சென்றாலும் ஒன்றாக தான் செல்வோம். மிட்டாய் முதல் சாப்பாடு வரை பங்குப்போட்டு தான் தின்றோம். அவள் பள்ளி வரவில்லை என்றால், எனக்கு எதோ போல இருக்கும். மாதங்கள் கடந்தன. என் பேச்சில் மாற்றம் தெரிகிறது என என் அம்மா உள்பட அனைவரும் சொன்னார்கள். நான் கொஞ்சம் திக்கி திக்கி பேசுகிறேனென்று, என் பரம்பரையில் யாருக்கும் அப்படி இருந்ததில்லையாம். நான் மட்டும் அப்படி பேசுவதால் என்னவோ, வீட்டில் எல்லோருக்கும் வருத்தம். அவர்கள் ஏன் என விசாரிக்கும்போது தெரிந்துக் கொண்டார்கள் நான் ஒரு ஊமை பெண்ணுடன் நட்புக் கொண்டு இருக்கிறேன் என… அவளிடமிருந்து தான் எனக்குப் பரவி இருக்கிறது என என் பெற்றோர்கள் நம்பிவிட்டனர். இனி நான் அவளுடன் பேசக்கூடாது என எச்சரித்தனர்.
ஆசிரியரிடம் கூட சொல்லி வைத்து விட்டார்கள். சற்று தள்ளியே அமர்ந்தேன். அவள் என்னிடம் வந்து பேசும்போது கூட, நான் அவளை வெறுப்பாக பார்த்தேன், திட்டினேன். ஆனால் அவளுக்கு என்ன காரணம் என்று தெரியவே இல்லை. பின்பு பேசவே இல்லை, பத்தாம் வகுப்பு வரை. பின் அவள் பள்ளியை விட்டு நின்றாள். அவளின் பிரிவும் என்னை எந்த அளவிலும் பெரிதாக பாதிக்கவில்லை அப்போது. ஆனால் என் வாய் திக்கல்கள் மட்டும் கொஞ்சம் இருந்துக் கொண்டேதான் இருந்தது.
இன்று மாலை வகுப்பில் ஆசிரியர் கூறினார்… வாய் பேசாமல் போவது, காது கேட்காமல் போவது எல்லாம் கருவிலே ஏற்படும் மரபணு மாற்றம் தான்… இது பரவும் நோய் இல்லை என்று. அதைக் கேட்டதும் என் மனதில் ஒரு வடு ஒன்று மீண்டும் துளிர் விட்டது.
நட்பு என்பது என்னவென்று தெரியாத பொழுதில் தான், என் நட்பு மிக அழகாக இருந்தது என நினைக்கிறேன். அவள் நெருங்கி வரும் போதெல்லாம் நான் விட்டு விலகியே சென்றேன்.. இப்போது யோசிக்கிறேன், நான் வெறுக்கும் போது அவள் என்னிடம் என்ன சொல்ல வந்திருப்பாள் என. இப்போது அந்த உதட்டின் அசைவுகளை காண ஏங்குகிறேன். அது என்னவென்று கேட்க அவள் என் அருகிலும் இல்லை. மனம் வருந்தி, கண்ணீர் சிந்துகிறேன்.. இப்போது அவளிடம் என்ன சொல்ல வந்தாய் என கேட்கத் தோணுது. அன்று என் வாய் திக்கியதை விட, இப்போது என் மௌனம் திக்குவதே எனக்குப் பெரும் குறையாக உள்ளது….
– கதைப் படிக்கலாம் – 125
இதையும் படியுங்கள் : கிழிந்த நோட்டு




