– ஷா. முஹம்மது அஸ்ரின்

அரசு மருத்துவமனையில் வலியை தாங்க முடியாமல், “ஐயோ! ஆ! எரியுது டாக்டர்!” என அழுகுரல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருந்தன. நோயாளிகளாக வந்தவர்களுக்குத் தங்களது உடலில் ஏற்பட்டுள்ள நோயை மறக்க வைக்கும் அளவுக்கு, அக்குரல்கள் மனதை களங்கடித்தன. குழந்தையை பெற்றெடுக்கும் மென்மையான உடலைக் கொண்ட தாயின் அழுகுரலில்லை அது. வீதிகளில் கம்பீரமாக தலைநிமிர்ந்து நடந்த இரு ஆண்களின் வலி, தாங்க முடியாத அவல ஓசைகள்.
மருத்துவமனைக்கு மாதம் மாதம் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள தாயுடன் வந்த வசந்தனின் செவிக்கு, அவர்களின் அழுகுரல்கள் விருந்தானது. ஆம்! பிறரது துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சி அடையும் உள்ளம் கொண்டவனுக்கு, அந்த அழுகை குரல்கள் பெரிய விருந்துதான். சிறுவயதில் இருந்தே வசந்தன் பிறரது துன்பங்களைக் கண்டு இன்பம் அடையக் கூடியவன்.
பரிசோனை செய்யும் அறையில் தாயை அமரச் செய்துவிட்டு, அழுகுரல்கள் எழும் திசையை நோக்கி கால்களும் அவனது மனமும் சென்றது. செல்லும் வழியில் இரத்தத் துளிகளும் இல்லை! மருத்துவர்களிடமும் எவ்வித பரபரப்பும் இல்லை! அப்ப எதுக்கு இப்படி அழுகனும் என்ற சந்தேகத்தை தீர்க்க, அழுகை ஒலிகள் வந்த அறையை நெருங்கினான். அந்த அறைக்கு வெளியில் இருந்த இரண்டு செவிலியர்கள் வெட்டியாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.
அறைக்கு வெளியில் ஒரு ஆண் கையில் குழந்தையோடு, வருத்ததுடன் அமர்ந்து இருந்தார். அவர் உள்ளே இருக்கும் ஆண்களின் ஒருவரது உறவினராக இருக்க வேண்டும். அறைக்கு உள்ளே ஒரு வயதான முதிய பெண், வலி தாங்க முடியாமல் வேதனையில் துடிக்கும், தீக்காயங்களோடு படுத்துக் கிடக்கும் ஒரு ஆணுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். மருத்துவரும் தனது சொந்த செலவில் பழங்கள், மருந்துகள் போன்றவற்றை இவருக்கு வாங்கிக் கொடுக்கிறார். மற்றொரு ஆண் வயிற்றில் பலமான காயத்தோடு ஆறுதல் கூறக்கூட ஆட்களில்லாத அனாதையாகப் படுத்துக் கிடக்கிறார்.
இவர்களை கண்டு மனம் மகிழ்ந்தாலும், “ஏன் தீக்காயத்தோடு இருப்பவனுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு. ஒருவேளை இவன் முக்கியமான அரசியல்வாதியா! அரசியல்வாதிக்கு முக்கியமானவனா! கோடிகளில் படுத்து உருண்ட செல்வந்தனா! அப்படி இருந்தால், ஏன் இவனுக்கு அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது!” எனப் பலவாறு வசந்தனின் ஆறாம் அறிவு சிந்திக்கத் தொடங்கியது.
மருத்துவமனைக்கு வந்தபோது யாரை எல்லாம் பார்த்தானோ, அவர்களிடம் தகவல்களைப் பெற மனம் துடிதுடித்தது. சரி, மருத்துவரிடமோ, பாட்டியிடமோ, வேலையை மறந்து கடலை போடும் செவிலியர்களிடமோ கேட்க வேண்டாம். அறைக்கு வெளியில் வருத்தத்தோடு போராடும் அந்த ஆண்மகனிடம் கேட்டுப் பார்ப்போம் என முடிவு செய்தான். பேச்சை எப்படித் தொடங்குவது என்பதை அறியாமல், “உள்ளே இருப்பவருள் ஒருவரின் உடன்பிறப்பா நீங்கள்?” என அவனுக்கு அருகில் சென்று கேட்டான்.
“இல்லை” எனக் கூறிவிட்டு தனது சோகக் கதையை, அவன் ஆரம்பித்தான். “நான் ஒரு தினக்கூலி வேலை செய்யும் ஏழை. நான் பிறந்தபோது தந்தையை இழந்தேன்! என் மகன் பிறந்தபோது தாயை இழந்தான்! உள்ளே இருக்கும் முதியபெண் என்னுடைய தாய். எனக்கு உறவு எனச் சொல்லிக் கொள்ள அந்த வயதான தாயும், இந்த பச்சிலங் குழந்தையான மகனுமே உள்ளனர்” என முடித்தான்.
இதைக் கேட்ட வசந்தன் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால், அவனுக்கு இது முதல்முறையாக வருத்தத்தை ஏற்படுத்தி, அந்த ஆண்மகன் மீது இரக்கம் கொள்ள வைத்தது.
“அப்ப! அந்த தீக்காயங்களோடு படுத்துக்கிடப்பவர்” எனக் கேட்டான் வசந்தன்.
“அவர் எனது மகனை காப்பாற்றிய தெய்வம். நான் வழக்கம் போல் கூலிவேலைக்குச் சென்றேன். என்னுடைய அம்மா இந்த குழந்தையை வீட்டிலுள்ள தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, தெருமுனைக் குழாயில் குடிநீர் பிடிக்க வந்துவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் நெருப்புப் பற்றி எரிந்தது. அந்த வழியே சென்ற இவர், வீட்டுக்குள் குழந்தை அழுகும் ஓசையைக் கேட்டு, நெருப்பு எரிவதைக் கூட பாராமல் தன் உயிரைத் துச்சமாக எண்ணி குழந்தையை காப்பாற்றிக் கொண்டு வந்து எனது தாயிடம் கொடுத்தார். அவரது பெயர் ஆண்டி. அவருக்கு உறவுன்னு சொல்ல யாருமில்ல” என்றான்.
இதனைக் கேட்ட வசந்தனுக்கு உள்ளே தீக்காயங்களோடு படுத்திருக்கும் ஆண்டியின்மீது நல்லெண்ணமும், இரக்கமும் தோன்றியது.
ஒருவரது அழுகுரலுக்குக் காரணத்தை அறிந்த வசந்தனின் மனம், வயிற்றில் காயத்தோடு இருக்கும் மற்றொரு மனிதரைக் குறித்து சிந்தித்தது. ஆனால், அவரை குறித்த செய்திகளைப் பெற அவருக்காக யாராவது வருகை புரிந்துள்ளார்களா? என்பதை அறிய வேண்டும். ஒரு மணி நேரம் ஆகியும் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. சரி, கடலை போடும் செவிலியர்களைத் தொந்தரவு செய்யும் தருணம் வந்துவிட்டது என எண்ணி, அவர்கள் அருகில் சென்றான். அவர்களில் ஒரு செவிலியர், “சனியன் செத்தும் தொலையுதுல! ரெண்டு நாளா ஆனாதையாகப் படுத்து கிடந்துக்கிட்டு நம்ம உயிர வாங்குது” என மற்றொரு செவிலியிடம் கூறினாள்.
சிஸ்டர் எனக் கூப்பிட்ட வசந்தனிடம், “உள்ளே இருக்கும் சனியனுக்கு நீ சொந்தக்காரனா?” எனக் கேட்டனர். “இல்ல! இல்ல! நான் அவர பத்தி தெரிஞ்சுக்குற வந்தேன்” என்றான்.
“இவன் ஒன்னும் பாரி பரம்பரையில வந்த வல்லலும் இல்ல! கர்ணன் பரம்பரையில வந்த கொடையாளியும் இல்ல!” என அவரின் வயதிற்குக் கூட மரியாதைக் கொடுக்காது, வார்த்தைகளால் வஞ்சித்தாள்.
ஏன் உங்களுக்கு அவர்மீது இவ்வளவு கோபம் எனக் கேட்ட போது, “இவன் பெயர் மாணிக்கம். பெரிய வீடு, கார், நிலம் போன்ற எல்லா வசதிகள் இருந்தும், மனிதத்தன்மை இல்லாத விலங்கினம். வீட்டில் வளர்த்து வந்த காளை மாட்டுக்கு உணவு வைக்காமல் கொடுமை செய்த பாவி. பசியின் கொடுமையால் வெறிப்பிடித்த அந்த மாடு, இவனுடைய கொழுத்த வயிற்றில் கொம்பால் குத்தியுள்ளது. ஆழமான காயத்தோடு பெற்ற பிள்ளைகளும் பார்க்க வராத அனாதைச் செல்வந்தராகப் படுத்துக்கிடக்கிறார்.” என்றாள்.
மாணிக்கம் என்ற பெயர் மட்டும் இருந்து என்ன பயன்? குணங்களும் மாணிக்கம் போன்று இருக்க வேண்டும் அல்லவா? அந்த ஐந்தறிவு உயிரினத்தைக் கொடுமை செய்த இந்த ஆறறிவு உயிரை, மேலிருந்து பார்க்கும் இறைவன் சும்மா விடுவானா! என அதிக நேரமாகப் பேசாமல் இருந்த மற்றொரு செவிலி, தனது கருத்தைப் பதிவிட்டாள். மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்ததால், இரு செவிலிகளும் விடைப்பெற்றுக் கொண்டனர்.
வசந்தனுக்கும் விடைபெறும் நேரம் வந்தது. “டேய் வசந்தா! அங்க என்னடா செஞ்சிட்டு இருக்க, இங்க வா!” என பரிசோதனை முடிவுகளைக் கையில் ஏந்தியவாறு அம்மா அழைத்தாள். அவனது எண்ணங்கள் இந்த இரு மனிதர்களின் கதையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்ததால், தாயின் அழைப்பு அவன் காதுகளில் விளங்கவில்லை.
“டேய்! சீக்கிரம் வாடா! நேரம் ஆயிருச்சு!” என்ற தாயின் மறு அழைப்பு மட்டுமே அவனது காதுகளைச் சென்று அடைந்தன. “இந்தா வந்துட்ட” என தனது தாயுடன் மருந்து வாடை அடிக்கும் மனையில் (மருத்துவமனையில்) இருந்து, புதிய மனிதனாக வெளியேறினான்.
வீட்டிற்கு வந்தவுடன் உடல் சோர்வாலும் மனச் சோர்வாலும் பாயை விரித்துப் படுத்தவுடன், நாளை கல்லூரியில் தேர்வு இருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. வசந்தன் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் இல்லை. ஆனால், தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவான். நாளை நடக்க இருக்கும் தமிழ் தேர்விற்குப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான். புறநானூறுப் பாடல்களைப் படிக்கும் போது, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடலடி வசந்தனின் மனதை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.
உறவுகள் இல்லாத அனாதையான ஏழ்மையான ஆண்டி, நெருப்பில் சாக இருந்த முன்பின் பழக்கமில்லாத குழந்தையை தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றி நன்மை செய்தான். அதனால், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களும், மருத்துவரும், செவிலியர்களும், ஆண்டியின் மனித நேயத்தை மனதில் கொண்டு அக்கரையுடன் கவனித்து வந்தனர்.
உறவுகள் இருந்தும் செல்வந்தராக இருந்த மாணிக்கம், மனிதநேயம் இல்லாமல் ஐந்தறிவு விலங்குக்குத் துன்பம் செய்தக் காரணத்தால் மருத்துவமனையில் கேட்பார் இல்லாமல் அனாதையாகக் கிடந்து துன்பப்படுகிறார்.
புத்தகத்தில் இருந்த புறநானூற்றுப் பாடல் அடிக்கு விளக்கமாக மருத்துவமனையில் நேரில் கண்ட நிகழ்ச்சி அமைந்துள்ளதை காணும்போது, “இன்பமும், துன்பமும் பிறரிடம் இருந்து வருவதில்லை” என்னும் தமிழனின் உயர் சிந்தனை வசந்தனின் மனதையும், அவனது குணத்தையும் அடியோடு மாற்றியது.
– கதைப் படிக்கலாம் – 134
இதையும் படியுங்கள் : தனிமை என்னை தாலாட்டுகிறது…




