– ரா. கனிகா

அதிகாலை 06.00 மணி இருக்கும். சூரியன் உதயமாகும் அந்த நேரத்தில், சூரிய வெளிச்சத்தில் மஞ்சள் வண்ண உடையணிந்து… காதில் மினுமினுக்கும் ஜிமிக்கி கம்மல் போட்டு… கைகளில் கண்ணைக் கவரும் வளையலணிந்து… காலில் ஜல் ஜல் என்று சத்தம் எழுப்பும் கொலுசு போட்டு… திருப்பூரிலிருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி போகும் பேருந்தில்… ஜன்னலோரத்தில் இயற்கைத் தாயின் அழகை ரசித்தபடி, கண்களை கூட சிமிட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், கயல்.
அவளுடன் அப்பாவும் வந்திருந்தார். கயல் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு குறும்புக்காரச் சிறுமி. அவளுக்குக் கலை என்று ஒரு அக்கா இருக்கிறார். அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அப்பாவுடன் கலை பேருந்தில் பயணிக்கவில்லை. ஏனென்றால், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா. அதனால்தான் அக்கா வரவில்லை. (சரி பேருந்திற்கு போவோம் வாங்க).
கயல் இயற்கையின் அழகை ரசிக்க, ரசிக்க அப்படியே கொஞ்ச நேரம் உறங்கினாள். அதைப் பார்த்த அப்பா ஜன்னலோரத்தில் தலையை சாய்த்து வைத்திருந்த மகளைப் பார்த்து, பாசமாக தன் தோளில் சாய்த்தார். கயல் மிகவும் நன்றாக உறங்கினாள். இப்படியே சிறிது நேரம் நகர, நடத்துனர் ஊ……….. ஊ……… (விசில்) அடித்தார். அந்த சத்தத்தில் கயல் எழுந்துவிட்டாள்.
அப்போது பேருந்தில் ஒரு பாட்டி ஏறினார். அவருக்குப் பேருந்தில் அமர இடமே இல்லை. அதைக் கவனித்த கயல், பாட்டி என் இருக்கையில் நீங்கள் அமருங்கள் என்று தான் அமர்ந்திருந்த இடத்தைக்காட்டி பாட்டியை உட்காரச் சொன்னாள். பாட்டி (நீ நல்லா இருப்ப சாமி) என்று மனதார வாழ்த்தினார்.
பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. தன் மகளின் இந்த நல்ல நடத்தையைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார் அப்பா. பிறகு மகளை தன் மடியில் அமர வைத்தார். (ஆமாம் இவர்கள் எதற்கு பொள்ளாச்சிக்கு போகிறார்கள்?)
கயல் அப்பாவின் தங்கை வீட்டிற்கு, அதாவது கயலின் அத்தை வீட்டிற்கு போகிறார்கள். கயலுக்கு அத்தையை மிகவும் பிடிக்கும். அதுவும் அத்தை மகளும், இவளும் ஒரே வகுப்பும் கூட. இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். அத்தைக்காக இல்லாவிட்டாலும், தன் தோழியை பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு வருவேன் என்று அடம்பிடித்து, பெரும் கலாட்டாவிற்கு பிறகுதான் பேருந்தில் அப்பாவுடன் வந்திருக்கிறாள். பிறகு பல்லடம் பேருந்து நிறுத்தம் வந்தது. நடத்துனர் (விசிலடிக்க), ஓட்டுனர் (பிரேக்கை) பிடித்து பேருந்தை நிறுத்தினார். பாட்டி, கயலிடம் (போயிட்டு வரேன் சாமி) என்று கூறி சிறிய காற்றாடி பொம்மையை பரிசளித்தார். பிறகு பேருந்திலிருந்து பாட்டி இறங்கினார். கயல் பேருந்திலிருந்தே பாட்டியை வழியனுப்பி ஒரு புன்சிரிப்புடன் டா….. டா….. காண்பித்தாள்.
பிறகு அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். அந்த ஜன்னலோரத்தில் பாட்டி பரிசளித்த அந்த காற்றாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், அதிலிருந்து வந்த காற்று, அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், அந்த காற்றாடியின் மேலேயே அவளது கவனம் இருந்தது. இவர்கள் சென்றுக் கொண்டிருந்த பேருந்து போகும் பாதையில் வேகத்தடை இருந்தது. அதைக் கவனிக்காத ஓட்டுனர், திடீரென (பிரேக்கை) பிடித்தார்.
அப்போது பேருந்தே ஒரு குலுங்கு குலுங்கி விட்டது. அதனால், கயலின் காற்றாடி கிழே விழுந்தது. கயல் அதை எடுத்துக் கொண்டு எழுந்திருக்கும் போது, ஜன்னலுக்கு வெளியே ஒரு நோட்டம் விட்டாள். அப்போது, பேருந்து பல்லடம் வழியாக செல்வதால் அவள் கையில் இருக்கும் காற்றாடி போலவே மிகவும் பெரியதாக நிறைய காற்றாடிகளை பார்த்து வியந்தாள். அப்போது, அவள் வாயை திறந்து வியப்பில் வியப்பாய் அந்த காற்றாடிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு அவள் மனதிற்குள் நிறைய கேள்விகள் தோன்றியது. அது என்னவென்றால், நம்மிடம் இருக்கும் இந்த சிறிய காற்றாடி போலவே, இங்கு நிறைய பெரிய காற்றாடிகள் உள்ளதே? (ஓஹோ…. இந்தப் பெரிய காற்றாடியில் இருந்துதான், நம்ம திருப்பூருக்கு காற்று வருகிறதா? என்று கயல் மனதில் எக்கச்சக்கமான கேள்விகள்.
அதனால், இந்தக் கேள்விக்கான பதிலை தன் அப்பாவிடம் கேட்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள். (அப்பா இங்கே பாருங்கள்)… நான் கையில் வைத்திருக்கிற மாதிரி இங்கே பெருசு பெருசா நிறைய காற்றாடிகள் இருக்குதேப்பா? ஒருவேளை, இந்தப் பெரிய காற்றாடியில் இருந்துதான் நம்ம திருப்பூருக்கு காற்று வருதாப்பா? என்று கயல் தன் அப்பாவிடம் வினவினாள்.
அப்பாவோ, இரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அதனால், அவருக்குப் படிப்பறிவு இல்லை. அதோடு அவரும் மகளைப் போலவே இதுவரை பெரிய காற்றாடிகளை பார்த்ததே இல்லை. எனவே, மகள் கேட்டக் கேள்விகளுக்கு (ஆமாம்) என்று பதிலளித்து விட்டார். கயலும் அப்பா சொன்னப் பதிலுக்கு ம்…. சரிப்பா என்று தலையை அசைத்துப் பாட்டிக் கொடுத்த காற்றாடியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு அவர்கள் அத்தை வீட்டிற்கு போகும் நேரம் வந்துவிட்டது. அதாவது கயலும், அவள் அப்பாவும் பேருந்தைவிட்டு இறங்கும் நேரம். (அதுதான்) அவர்களுடைய பொள்ளாச்சி நிறுத்தம். இருவரும் பேருந்தை விட்டு இறங்க தயாராக இருந்தனர். கயல் அவளுடைய ஜன்னலோர இருக்கையை மிகவும் (Miss) பண்ணினாள்.
பாட்டிக் கொடுத்த காற்றாடியை அப்பா கொண்டு வந்த பைக்குள் பத்திரமாக வைத்தாள். பிறகு இவர்கள் நிறுத்தம் வந்ததும், அவசர அவசரமாக இருவரும் பேருந்தை விட்டு இறங்கினார்கள். அப்பா கயலின் கையைப் பிடித்துக்கொண்டார்.
பொள்ளாச்சிப் பேருந்து நிறுத்தத்திலிருந்து அத்தை வீட்டிற்கு சிறிது தூரம் நடந்துப்போக வேண்டும். அதனால் இருவரும் நடக்க துவங்கினர். அப்போது கயல் (அப்பா மணி என்ன?) என்று கேட்டாள். அதற்கு அப்பா (09.00 மணி பாப்பா) என்றார். சிறிது தூரம் நடந்தப் பிறகு அத்தை வீட்டை வந்தடைந்தனர்.
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த அத்தை, அண்ணனையும், அண்ணன் மகளையும் பார்த்தவுடன், அதை அப்படியே விட்டுவிட்டு வந்தவர்களை வரவேற்றார். பிறகு இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்து, நன்றாக உபசரித்தார்.
பிறகு கயல் அத்தை மகளை பார்த்தாள். அவள் பெயர் யாழினி. அவள் கயல் என கட்டியணைக்க… இவள் யாழினி என கட்டியணைக்க… (ஒரே பாசமழையாக இருந்தது).
இருவரையும் பார்த்து அப்பாவும், அத்தையும் முகமலர்ந்தனர். கயலும், யாழினியும் நிறைய நேரம் நிறைய விளையாட்டுகளை விளையாடினர். அப்பாவும் கயலும் மாலை 03.00 மணிக்கு புறப்பட்டனர். இருவரும் அத்தை மற்றும் யாழினியிடம் (போய்ட்டு வரேன்) என்று கூறி புறப்பட்டனர். அப்போது யாழினியிடம் (வருந்தாதே யாழினி, கயலை மற்றொரு நாள் கூட்டி வருகிறேன்) என்று கூறினார்.
(அப்பறம் என்ன?) இருவரும் பொள்ளாச்சி நிறுத்தத்திற்கு வந்து பேருந்தில் ஏறினர். கயல், அவளுக்கு மிகவும் பிடித்த ஜன்னலோர இருக்கையில் வந்து அமர்ந்தாள். அப்பா அவளருகில் அமர்ந்தார். பேருந்து புறப்பட்டது. கயலுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஏனென்றால், அத்தை வீட்டிற்குப் போகும்போது பார்த்த காற்றாடிகளை, இப்போது வீட்டிற்கு போகும்போதும் பார்க்க போகிறோம் என்ற குஷியுடன் இருந்தாள். அப்படியே கொஞ்ச நேரம் கழிந்தது. கயலின் கண்களில் தூக்கக் கலக்கம். ஆனால், காற்றாடிகளை பார்க்க வேண்டும் என்பதற்காக, தூக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டாள்.
பிறகு அவள் எதிர்ப்பார்த்தது மாதிரியே, பல்லடம் சாலையில் காற்றாடிகளைப் பார்த்தாள். அப்போது அவள் கண்களில் இருந்த தூக்கம் பறந்துப்போனது. காற்றாடிகளை பார்த்த குஷியில் (ஹே….. ஹோ) என்று மிகவும் சந்தோஷமாக கத்தினாள்.
அப்பா கயல் மகிழ்ச்சியடைவதைப் பார்த்து, பைக்குள் இருந்த காற்றாடி பொம்மையை கயலுக்கு எடுத்துக் கொடுத்தார். கயலுக்கு அதை கையில் வாங்கியதும், இன்னும் மகிழ்ச்சி அதிகரித்தது.
பின்னர் இருவரும் திருப்பூர் வந்தடைந்தனர். கயல் பாட்டிக் கொடுத்த காற்றாடியை கையிலேயே வைத்துக்கொண்டாள். இருவரும் அவர்கள் வீட்டுத் தெருவருகே வந்தடைந்தனர். அப்போது மாலை 06.00 மணி இருக்கும். வெளியில் எப்பொழுதும் போலவே, பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள், கயல் கையில் இருந்த காற்றாடியைப் பார்த்து (ஏய், அங்கப் பாருடி கயல் கையில் ஒரு குட்டி காற்றாடி இருக்குது) (ஆமாடி… வா….. அவகிட்ட போய் இது ஏதுன்னு கேட்போம்) (ம்…..)
குழந்தைகள் அனைவரும் கயலிடம் ஓடிவந்து, கயல் இந்தக் குட்டி காற்றாடி யாரு கொடுத்தா? என்று கேட்டப்போது கயல் (இது ஒரு பாட்டி பரிசளித்தது என்று நடந்தக் கதையை கூறினாள்), அதைக் கேட்ட அனைவரும் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிறகு கயல் அம்மா சமைத்து வைத்திருக்கும் பிரியாணியின் வாசனையில் பறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போது அப்பாவும் உடன் சென்றார். கயலைப் பார்த்தவுடன் அம்மா எழுந்து வந்து, பாசமாக கட்டியணைத்துக் கொண்டாள். கலை அக்காவும் கயலைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
பிறகு, நாளை திங்கட்கிழமை என்பதால் கயலின் அக்கா அமர்ந்து வீட்டுப்பாடம் எழுத தொடங்கினாள். கயலையும் அக்கா வீட்டுப்பாடம் எழுதும்படி கூறினாள். ஆனால் கயல் மறுத்து தன் கைகளை பெருக்கல் குறி போல் மடக்கிக்கொண்டாள்.
அப்போது தான் அக்கா சிறிய காற்றாடியை பார்த்தாள். (அது என்னது?) என்று அக்கா கேட்க, கயல் மறுபடியும் பாட்டிக் கதையை கூறினாள். அக்கா மிகவும் பெருமையடைந்தாள். தங்கையை தன் மடியில் உட்கார வைத்து கொஞ்சினாள். இப்படி இருக்கையில் (கரண்ட்) போய்விட்டது. இருவருக்கும் வியர்க்கத் தொடங்கியது. அப்போது கயல், அக்கா அந்தப் பெரிய காற்றாடி நின்றிருக்கும்… அதனால தானே என்று கேட்டாள்.
அதற்கு அக்கா பெரிய காற்றாடினா? என்று ஆச்சரியப்பட்டாள். (ஆமாம்….. அக்கா என்னுடைய புத்தகத்தில் கூட இருக்குது… இரு காட்டுகிறேன்) என்று கயல் கூறி, ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தை கையில் எடுத்துப் புரட்டி, எப்படியோ காற்றாடியை கண்டுபிடித்து அக்காவிடம் காண்பித்தாள்.
அக்கா (ஹா…. ஹா……) என்று சிரித்தாள். பாப்பா, அது பெரிய ஃபேன் இல்லை. அதனுடைய பெயர் காற்றாடி. இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு கருவி என்று, கயலுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுத்தாள்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா, ஆமாம்… கயல் நான் பேருந்தில் உன்னிடம் கூறிய பதில் தவறானது. அக்கா கூறியதே சரியானது. எனக்குப் படிப்பறிவு இல்லாததால், இதெல்லாம் எனக்கு தெரியாது.
அதனால் நீயும் அப்பாவை போல் இல்லாமல், அக்காவை போல நன்றாக படி என்று கூறி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். பிறகு வீட்டுப்பாடத்தை எழுத மாட்டேன என்று கூறிய கயல், தனது பள்ளி பையை எடுத்து வந்து எழுத துவங்கினாள். இதைப் பார்த்த அக்கா, பாப்பாவின் தலையை தடவிக் கொடுத்தாள்…… பிறகு அனைவரும் பிரியாணி சாப்பிட அமர்ந்தனர்
இதுதான் நம் குட்டி கயலின் காற்றாடி கதை…….
– கதைப் படிக்கலாம் – 114
இதையும் படியுங்கள் : மணியும் கொரோனாவும்




