– ந.மோகன்ராஜ்

“டீச்சர், நாளைக்குப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்ச்சி அறிவிக்கிற நாள். எப்படியாவது, பள்ளிக்குப் போக வேண்டும்; கொரோனா தொற்று அதிகமாகப் பரவிக்கொண்டு இருக்கு; சாலைகள் எல்லாம் வெறிச்சோடி இருக்கு; பேருந்துகளும் இல்லை; பாத்துப் பத்திரமா வந்துருங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டு, தொலைபேசியைத் துண்டித்தார் தலைமையாசிரியர்.
மறுநாள் காலையில், டீச்சர் மாணவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலுடன், பள்ளிக்கு விரைவாகக் கிளம்பினார். பேருந்து வசதியில்லாத அத்தருணத்தில் தன்னுடைய தந்தையின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தட்டுத் தடுமாறி புறப்பட்டுப் பள்ளிக்குச் சென்றார்.
“அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய பள்ளிக்கு, எப்படியோ ஒரு மணி நேரத்திற்குள் வந்து விட்டோம்” என்ற மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் நுழைந்தார் டீச்சர்.
டீச்சர், பள்ளிக்கு வந்திருந்த செய்திக் கேட்டு, அங்கே இருந்த பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியில் ஓடோடி வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்க்கு மாறாக, பள்ளியின் வாசல் பூட்டப்பட்டிருந்தது. டீச்சரைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் மாணவர்கள் அனைவரும் வாசலிலே தவம் இருந்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கணினியில் பார்த்துக் குறித்துக்கொண்டு இருந்தார் டீச்சர்.
அதற்குள், வெளியே சத்தம் கேட்டு, டீச்சர், எட்டிப் பார்க்க..
“எங்கேப் பார்த்தாலும் கொரோனா தொற்று நோய் இருக்கிறது; இங்கே விளையாடக்கூடாது; எல்லோரும் வீட்டுக்குப் போங்க” என்று காவலாளி சிவா, பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருந்தார்.
“என்னாச்சு! சிவா, என்று வினவ”…
“பிள்ளைகள் எல்லோரும் உங்களைப் பார்க்கனும்னு சொல்றாங்க டீச்சர்” என்று சிவா கூறினான்.
“பிள்ளைகளை உள்ளே விடுங்க; மறக்காம அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து, மைதானத்தில் இடைவெளி விட்டு உட்கார சொல்லுங்க நான் வந்துவிடுறேன்” என்றார் டீச்சர்.
பிள்ளைகளும் அமைதியாக மைதானத்தில் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்திருப்பதை கவனித்த டீச்சர் அவர்களிடம் சென்று பேசுவதற்காக, வேலைகளை விரைவாக முடித்தார்.
ஒரு வழியாக பிள்ளைகளிடம் சென்றார்.
பிள்ளைகள் அனைவரும் “குட் மார்னிங் டீச்சர்” என்றனர்.
டீச்சரும் பதிலுக்கு “குட் மார்னிங்” என்று சொல்லிவிட்டு, நலம் விசாரித்தார்.
ஒவ்வொரு பிள்ளைகளும் அவரவர்களுக்குத் தெரிந்தளவு கொரோனாவைப் பற்றி எடுத்துரைத்தனர்.
கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். அனைவரும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிள்ளைகளும் டீச்சர் சொல்வதற்கு மறுபேச்சின்றி தலையாட்டினார்கள்.
“டீச்சர், குணா விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்குச் சென்று, சேலத்துலயே மாட்டிக்கிட்டான்” என்று எல்லோரும் சொல்லிச் சிரித்தனர்.
“சரி! சரி! நிலைமை சரியான பிறகு அவன் வந்துடுவான். ஒழுங்கா படிக்கிறீங்களா? இல்லையா?, தொலைக்காட்சியில் நாள்தோறும் உங்களுக்காகத் தான் பாடம் நடத்துறாங்க. சரியாகக் கவனிக்கனும்; உங்களுக்குச் சந்தேகம் வரும் போதெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; பள்ளிக்கூடம் திறந்தப் பிறகு நான் சொல்லிக் கொடுக்கிறேன்” என்று டீச்சர் கூறினார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூற துடுக்கென்று……..
“டீச்சர், அப்போ பள்ளிக்கூடம் சீக்கிரமா திறந்துடுவாங்களா” என்று மணி ஆவலோடு கேட்டான்.
“கொரோனா தொற்றுக் குறைந்தப் பிறகு திறந்துடுவாங்க மணி, அதற்குள் தடுப்பூசியையும் சீக்கிரமாக கண்டுபிடிச்சிடுவாங்க, அதுவரைக்கும் தொலைக்காட்சியில் வருகிற பாடத்தைப் படிக்கனும்” என டீச்சர் கூறினார்.
“இல்லைங்க டீச்சர் ஒழுங்கா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது; ஒரு வேளையாவது உணவு கிடைக்கும் என்று தான் பள்ளி வந்தோம். இன்று கல்வி ‘ஆன்லைன்ல வந்துவிட்டது’ ஆனால், உணவு எதிலும் வரவில்லை டீச்சர்” என்றான்.
முதல் முறையாக வினாவுக்குப் பதில் கூற முடியாமல் தடுமாறினார் டீச்சர்.
– கதைப் படிக்கலாம் – 117
இதையும் படியுங்கள் : சிறு கனவும், சில கற்பனையும்…




