த்ரிஷாவிற்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்…
ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை த்ரிஷா.
ஐக்கிய அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விசா எதுவும் தேவையில்லை.
இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக் கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன் லால், பிருதிவி ராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு நேற்று ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவிலிருந்து கோல்டன் விசா பெறும் முதல் நடிகை இவராவார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.