என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க… ‘உடன்பிறப்பே’ படம் எப்படியிருக்கு?

2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே. அடிதடி அண்ணனாக சசிக்குமார், சட்டத்தை நம்பும் நேர்மையான ஆசிரியராக சமுத்திரகனி, அன்பு தங்கையாக ஜோதிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும், கதையை எங்கே கொண்டு செல்வது என தெரியாமல் இயக்குநர் இஷ்டத்துக்கு திசைமாற்றி இருக்கிறார்.

கதை:

எதற்கெடுத்தாலும் அடிதடி என மீசையை முறுக்கிக் கொண்டு வலம்வரும் சசிகுமார், சட்டத்தை மட்டுமே நம்பும் சமுத்திரகனி இருவரும் மாமன், மச்சினங்கள். இவர்களுக்கு இடையே தங்கையாகவும் மனைவியாகவும் ஜோதிகா கண்ணீரும் கம்பளையுமாக அல்லல்படுவது தான் கதை. சசிகுமாரின் எதிரி இடும் சாபத்தால, தன் மகன் இறந்துவிட்டதாக நினைக்கும் சமுத்திரகனி, சசிகுமாரை விட்டு விலகுகிறார். உண்மையோ கிணற்றுக்குள் விழுந்த தன் மகனையும் அண்ணன் மகனையும் காப்பாற்ற முடியாமல் போகும் ஜோதிகா, தன் மகனை தியாகம் செய்துவிட்டு மருமகனை மட்டும் உயிருடன் மீட்கிறார். இதனால் பிரிந்து போன குடும்பம் பல வருடங்களுக்குப் பின்னர் சேர்ந்ததா என்பது தான் கதை.

திரை விமர்சனம்:

ஜோதிகாவின் 50 வது படம் என்பதால் ஆவலுடன் அமேசான் ப்ரைமை ஓபன் செய்த ரசிகர்கள் ‘என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க என் செல்லத்த’ என ஷாக்கிறார்கள். அதுவும் அண்ணன் மகனும், தன் மகனும் கிணற்றில் விழுந்துவிட, அவர்களை காப்பற்றுவதற்காக ஜோதிகா கிணற்றில் குதிக்கும் காட்சிகள் எல்லாம் சாரி பாஸ் சொல்ல வைக்கிறது. அண்ணன் தன் மீது வைத்துள்ள பாசத்தைப் பற்றி புகழ்ந்து பேசும் ஜோதிகா, அவரிடம் ஒருமுறை கூட பேசவில்லை. எல்லாத்தையும் விட ஹைலைட்டாக தூணோடு, தூணாக நின்று எப்போதும் ஜோ அழுது கொண்டு இருப்பதை பார்க்க சகிக்கவில்லை.

ஆனால் ஜோதிகாவின் கதாபாத்திர வடிவமைப்பு ஏமாற்றம் தரவில்லை. இரட்டை மூக்குத்தியில் தெக்கத்தி பெண்ணாக வந்து கிழக்கு சீமையிலே ராதிகாவை நியாபகப்படுத்துகிறார். தன் தலை முடியால் கொலை செய்யும் காட்சியில் தெறிக்கவிடுகிறார். பிரிவை நினைத்து அழும் போதும், அண்ணன் குடும்பத்தில் சம்மந்தம் செய்யும் போது மகிழும் போதும், கணவனிடம் தவிக்கும் போதும், ஒரு கட்டத்தில் கொலை செய்யும் போதும்… அந்தந்த கதாபாத்திரமாகவே மாறும் ஜோதிகாவின் நடிப்பு படத்திற்கு ஆறுதல். என்னதான் குடும்ப சென்டிமெண்ட் படமாக இருந்தாலும் காதல் என்பது கடுகளவு கூட இல்லை. ஜோதிகா – சமுத்திரகனி, சசிக்குமார் – சிஜா ரோஸ் கேரக்டர்களிடையே காதல் தேவையில்லை என்றாலும், சசிக்குமாரின் மகன், ஜோதிகாவின் மகள் இருவரும் காதலிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அங்கும் எதுவும் எடுபடவில்லை. ஒரு பாடலோடு அவர்களது காதலை ஊத்தி மூடிவிடுகிறார் இயக்குநர்.

நல்ல கதைக்களத்தையும் நடிகர்களையும் தேர்வு செய்த இயக்குநர், அதனை திரைக்கதையில் எப்படி கொண்டுவர வேண்டும் என மறந்துவிட்டார். சமுத்திரக்கனி நேர்மையான பாத்திரம் என்பதால், அதனை நியாயப்படுத்த கலையரசன் கேரக்டரை தேவையில்லாமல் கொண்டுவந்து ‘உடன்பிறப்பே’ தலைப்பை வீணடித்துவிட்டதாக தோன்றுகிறது. சசிகுமார் கேரக்டரை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம், முறுக்கி விடும் அளவிற்கு மீசையை வளர்க்கவிட்ட அவருக்கு, நடிக்கும் வாய்ப்பை கொஞ்சம் அதிகப்படுத்திருக்கலாம். ஜோதிகா பெரும்பாலான காட்சிகளில் தூணோடு தூணாக நின்று கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கிறார். சமுத்தரக்கனிக்கு எப்போதும் ரசிகர்கள் பார்த்து பழக்கப்பட்ட அந்த ஸ்ட்ரிக்டான வாத்தியார் கேரக்டர் சற்றே சலிப்பு தட்ட வைக்கிறது. மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்தை வைத்து கதை கண்டபடி எடுத்து கதாபாத்திரங்களை சல்லி, சல்லியாக நொறுக்கி இருக்கிறார்கள். டி. இமானின் இசையில் ‘அண்ணே யாரண்ணே’ பாடல் மட்டும் மனதில் தங்குகிறது. பின்னணி இசையில் இடைவேளைக்குப் பின்புவரும் கோயில் காட்சியில் ஒலிக்கும் மங்கள இசை மனதை இதமாக்குகிறது.

பாசமலர் அளவுக்கு எதிர்பார்த்து காத்திருந்த உடன்பிறப்பே திரைப்படம் கிழக்கு சீமையிலே அளவிற்கு கூட இல்லாமல் போய்விட்டது. ஏதோ எங்க வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த அளவிற்கு கூட சென்டிமேன்ட் சீன்களில் கண்ணீரை வர வைக்க முடியாமல் போனது பெரிய ஏமாற்றம் தான். ‘உடன்பிறப்பே’ அழவைக்க முயற்சி தோல்வி…!

Exit mobile version