சமீபத்தில் வெளியாகிய இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு அந்த திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் கௌதம் கார்த்திக் நடித்த ஹர ஹர மஹாதேவி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார். இது ஒரு அடல்ட் காமெடி திரைப்படம் ஆகும். இதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் அடல்ட் காமெடி திரைப்படத்தை இயக்கினார். தற்போது இரண்டாம் குத்து என்னும் திரைப்படத்தை இயக்கி தானே அதில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரே சற்று முகம் சுழிக்கும் அளவுக்கு இருந்தது பலருக்கு. இது குறித்து அந்த போஸ்டருக்கு இயக்குனர் இமயம் பாரதி ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் சந்தோஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “இயக்குநர் பாரதிராஜா மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ,” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் டிக் டிக் டிக் படத்தில் 3 இளம் கதாநாயகிகள் நீச்சலுடையுடன் நிற்க அருகில் பாரதிராஜா உட்கார்ந்து இருக்கும் படத்தையும் சந்தோஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.