தனுஷின் ஜகமே தந்திரம் பட டீஸரில் குக் வித் கோமாளி பிரபலம் பணியாற்றியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தனுஷ் தியேட்டரில் படத்தை வெளியிடவே அதிகம் விரும்பியதாகவும், இதனால் தயாரிப்பாளர் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசரைக் கொண்டாடும் ரசிகர்கள் குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் ஒரு காட்சியில் தனுஷ் உடன் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாபா பாஸ்கர் தனுஷ் உடன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திலிருந்தே நடன இயக்குநராக பணியாற்றி பல வெற்றிப்பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு சில படங்களில் பாடல்களின் போதும் ஒரு சில காட்சிகளிலும் தனுஷ் உடன் திரையில் பாபா பாஸ்கர் வருவார். நடன இயக்குநராக மட்டுமின்றி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘குப்பத்து ராஜா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கும் பாபா பாஸ்கர் தெலுங்கு பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம்பிடித்தார். இதையடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 2-ல் பாபா பாஸ்கர் பங்கேற்றுள்ளார்.