ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஐதராபாத் :
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பரிசோதனை தேவைப்படுவதால் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பின்னர் அறிக்கை வெளியிட்டது.
அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், நாடித்துடிப்பு உள்ளிட்ட பிற செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவரது ரத்த அழுத்தத்தை கருத்தில்கொண்டு, முழுமையான ஓய்வு எடுக்கும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
Read more – விவசாயிகளிடம் இருந்து நிலங்களை யாரும் எடுத்து செல்ல முடியாது : ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இதையடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வாரம் முழுஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்று மாலையே தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.




